வேலைக்காரன் – விமர்சனம்
RATING : 3/5
நாட்டு மக்களை எப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு பெரும் உணவுப் பொருட்களை விற்கும் சந்தையாக மாற்றுகிறது. அதன்மூலம் மக்கள் என்னென்ன வழிகளில் நோய்கள் வருகிறது?
அதன் பின்னணியில் இருக்கிற சதி என்ன போன்ற கேள்விகளுக்கு சமூகப்பொறுப்போடு திரையில் சிவகார்த்திகேயன் சீறியிருக்கும் படம் தான் இந்த ‘வேலைக்காரன்.’
நக்கல், நையாண்டி, டைமிங் டயலாக் என இதுவரை நடித்த படங்களில் காமெடி ஹீரோவாக வந்த சிவகார்த்திகேயன் இதில் பொறுப்புள்ள மாஸ் ஹீரோ லெவலுக்கு முன்னேறியிருக்கிறார்.
அவரை ரூட் மாற்றி விட்ட பெருமை இயக்குனர் மோகன் ராஜாவுக்கு நிச்சயம் உண்டு.
வழக்கமான காமெடிப்படமாக சிவகார்த்திகேயன் பட லிஸ்ட்டில் சேர்ந்து விடாமல் இனி இப்படிப்பட்ட கதைகளுக்கும் என் கால்ஷீட் உண்டு என்று உணர்த்திய சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
சென்னை மாநகரில் கூலிக்கார குப்பமாக இருந்து பின்னாளில் கொலைகார குப்பமாக மாறும் ஏரியாவில் வசிக்கிறார் ஹீரோ சிவகார்த்திகேயன். அந்த ஏரியா மக்கள் அத்தனை பேரையும் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று திசை மாற்றிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கும் ரெளடி பிரகாஷ்ராஜின் அந்த போக்கு சிவகார்த்திகேயனுக்கு எரிச்சலைத் தருகிறது.
எப்படியாவது தன் ஏரியா மக்களை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் அவர் அதற்காக அந்த ஏரியாவாசிகளுக்கு மட்டுமே கேட்கும் கம்யூனிட்டி ரேடியோ ஒன்றை ஆரம்பிக்கிறார். அதோடு குடும்ப கஷ்டம் தீர வேண்டுமென்பதற்காக உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு பகத் பாசில் மூலம் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன் அதே கம்பெனியில் தன் நண்பனான விஜய் வசந்த்தையும் வேலைக்கு சேர்த்து விடுகிறார்.
எதிர்பாராத விதமாக விஜய் வசந்த்தை பிரகாஷ்ராஜ் கொலை செய்கிறார். இதனால் கோபப்படும் சிவகார்த்திகேயன் பிரகாஷ்ராஜிடம் நண்பன் கொலைக்காக நியாயம் கேட்கப் போக, அவனை கொலை செய்யச் சொன்னதே உன் முதலாளி பகத் பாசில் தான் என்கிற உண்மை சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்.
அதுமட்டுமில்லாமல் நான் மட்டுமல்ல, நீ கூட உன் முதலாளியிடம் கூலிக்கு வேலை செய்பவன் தான் என்கிறார். அப்படிச் சொல்லும் பிரகாஷ்ராஜிடம் குழம்ப உணவுகளில் அந்த கார்ப்பரேட் நிறுவனம் தயார் செய்கிற நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்கள் குறித்தும், அதிர்ந்து போகிறார்.
எந்த வேலையாட்களை வைத்து அந்த நிறுவனம் மக்களைக் கொல்லும் விஷ உணவுகளை தயாரிக்கிறதோ அதே வேலை ஆட்களை வைத்து அந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக சிவகார்த்திகேயன் சாட்டையை சுழற்றுவதே இந்த வேலைக்காரன்.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகளும் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன்களைப் போல பக்கா காமெடிப்படமாகத்தான் இருக்கும் என்று நினைத்துப் போனால் கண்டிப்பாக இது அந்த லிஸ்ட்டில் சேராது. மாறாக காமெடி செய்வதற்கென்றே ரோபோ சங்கரை இறக்கி விட்டு இதில் முழுக்க முழுக்க ஒரு மாஸ் ஹீரோவுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்படி காமெடி மட்டுமே இதுவரை தன்னுடைய படங்களில் செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை முதல்முறையாக கோபம் கொப்பளிக்க வரும் ஹீரோவாக முகம் மாற்றிப் பார்ப்பதே ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாகத்தான் இருக்கும். பாடல்கள், ஆக்ஷன் காட்சிகளில் முந்தையை படங்களை விட எக்ஸ்ட்ராவாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பகத் பாசில் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமலேயே நடிப்பில் சைலண்ட்டாக மிரட்டும் அவரது வில்லத்தனம் செம… செம…
நாயகி நயன்தாரா சிவகார்த்திகேயன் உடனான காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பளிச்சென்று தெரிகிறார். அதைத்தாண்டி படத்தின் கதை ஓட்டத்துக்கு அவருடைய கேரக்டருக்கு பெரிதாக வேலையில்லை.
இதுபோன்ற வில்லத்தனத்துக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என்று பிரித்து மேய்ந்திருக்கிறார் ஏரியா ரெளடியாக வரும் பிரகாஷ்ராஜ்.
தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் என எக்கச்சக்க தெரிந்த முகங்கள் இருந்தாலும் சிவகார்த்திகேயன் நண்பராக வரும் விஜய் வசந்த், சினேகா இருவர் கவனிக்க வைக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் “கருத்தவனெல்லாம் கலீஜாம்” உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானவை தான். பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சலைக் குறைத்திருக்கலாம்.
கார்ப்பரேட் நிறுவனத்தின் பகட்டு, குப்பத்து மக்களின் ஏழ்மை என இரு வித டோன்களில் அசத்துகிறது ராம்ஜியின் பர்பெக்ட்டான ஒளிப்பதிவு.
”நாம பார்க்குற வேலைக்குதான் விசுவாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல”.
”நம் கண்ணெதிரிலேயே நம் குழந்தைகள் சாவறதை பார்க்குற தலைமுறை நாமளாதான் இருப்போம்”.
”நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்”.
”பொருளை விக்கிறோம்னு சொல்லி இவ்வளவு நாளா பொய்யைத்தானே வித்துக்கிட்டு இருக்கோம்”.
”உலகின் தலைசிறந்த சொல் செயல்”.
என விடாமல் தெறிக்கிற வசங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரில் கிளாப்ஸ்களை அள்ளுகின்ற உயிர்த்துடிப்புள்ள வசனங்கள்.
இரண்டே முக்கால் மணி நேரம் என்பது படத்தின் விறுவிறுப்பு வேகத்தடை. கால்மணி நேரமாவது கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் ரூபன்!
வெறுமனே பெரிய ஹீரோவின் கால்ஷீட் கிடைத்து விட்டது. அதை வைத்து ஒரு பக்கா கமர்ஷியல் படத்தைக் கொடுத்து அடுத்த படத்தில் தன் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு போயிருக்கலாம். அதை பெரிதாக நினைக்காமல் நம் அன்றாட உணவில் இருக்கிற நச்சுத்தன்மை சம்பந்தமான உணவு அரசியலை துணிச்சலாக படமாக்கி சமூகப் பொறுப்போடு அணுகிய விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.