‘சோக்காலி மைனர்’ ஆக தமிழுக்கு வரும் நாகர்ஜூனாவின் தெலுங்கு படம்
தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது தமிழுக்கு வந்து நல்ல வசூலைப் பெறுகின்றன. அந்த வரிசையில் ‘சொக்கடி சின்னி நயனா’ என்ற தெலுங்குப் படம் தான் தமிழில ‘சோக்காலி மைனர்’ என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது.
கல்யாண் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், லாவண்யா திரிபாதி, நாசர், பிரம்மானந்தம், சலபதிராவ், ஹம்சநந்தினி, அனுசுயா ஆகியோருடன் அனுஷ்காவும் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் நாகார்ஜுனாவும், லாவண்யா திரிபாதியும் கணவன் மனைவி. நாகார்ஜுனாவிடம் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் எண்ணத்தில் இருக்கிறார் லாவண்யா. இதனால், மனைவியை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சிவபுரத்திற்கு வருகிறார் நாகார்ஜுனா. தன்னுடைய அம்மா ரம்யா கிருஷ்ணனிடம் இந்த விவாகரத்து விஷயத்தைச் சொல்கிறார்.
30 வருடங்களுக்கு முன்பு இறந்த ரம்யாகிருஷ்ணனின் கணவரான நாகார்ஜுனா (இரண்டாவது வேடம்) கடவுள் சக்தியால் மீண்டும் வருகிறார். தனது மகன், மருமகளின் விவாகரத்து எண்ணத்தை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அப்பா கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனும், மகன் கதாபாத்திரத்திற்கு லாவண்யாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.
அனுப் ரூபன்ஸ், ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சுகுமார் கணேசன் பாடல்களை எழுதியுள்ளார். வசனம் – மைக்கேல் யாகப்பன், ஒளிப்பதிவு – பி.எஸ்.வினோத், ஆர். சித்தார்த்.
விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.