வந்தார் ‘ஹிப் ஹாப்’ ஆதி : பிரிந்தது கே.வி.ஆனந்த் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி!
மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான், செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா என தமிழ்சினிமாவில் சில கூட்டணிகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் வரவேற்பைப் பெரும்.
முதல் படமான ‘கனா கண்டேன்’ படத்தைத் தவிர ‘அனேகன்’ வரை கே.வி.ஆனந்த் இயக்கிய அத்தனை படங்களிலும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பாளராக இருந்தார்.
இதோ விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் ‘கவண்’ படத்தில் தனது ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஹாரிஸை கழற்றி விட்டு விட்டு ‘ஹிப் ஹாப்’ ஆதியுடன் கை கோர்த்திருக்கிறார் கே.வி. ஆனந்த்.
‘கவண்’ என்றால் உண்டிவில் என்று அர்த்தம். அந்த வகையில் இப்படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி உண்டி வில்லைப் போல ஒரு சாதாரண மனுஷன். அப்படிப்பட்டவர் ஒரு கார்ப்பரேட் கும்பலை எதிர்த்து போராடுவதும், அந்தப் போராட்டத்தில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதும் தான் கதையாம்.
கே.வி.ஆனந்த படங்கள் என்றாலே கமர்ஷியலோடு ஒரு மெசேஜும் இருக்கும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு படம் தான். இதில் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்த போது அந்த இரண்டுக்குமே செட்டாகியிருந்தார் விஜய் சேதுபதி. காதலும் கடந்து போகும் படத்தில் மடோனா செபாஸ்டியனோட யதார்த்தமான நடிப்பைப் பார்த்து தான் இதில் நாயகியாக கமிட் செய்தேன்.
படத்தில் டி.ஆரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். அவர்கிட்ட நடிக்கக் கேட்டு போனப்ப முதல்ல மறுத்துட்டார். ”நீங்க என்னை வெச்சு காமெடி பண்ணத்தானே போறீங்க? அதனால முடியாது”ன்னு சொன்னார். அப்புறம் ரெண்டு மூணு தடவை அவரொ அப்ரோச் பண்ணி கதையையும், அவரோட கேரக்டரைப் பத்திச் சொன்னதும் நடிக்க ஓ.கேன்னுட்டார். ஆனால் இந்த வயசிலேயும் அவர்கிட்ட அப்படி ஒரு எனர்ஜி இருக்கு. அது ரொம்ப ஆச்சரியம் தான்” என்றார் கே.வி.ஆனந்த்.
சரி, ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக ஹிப் ஹாப் ஆதியை இசையமைப்பாளராக கமிட் செய்தது ஏன்?
‘தனி ஒருவன்’ படத்துல பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையும் ரொம்ப பிரமாதமா இருந்துச்சு. அதேபோல ‘கவண்’ படத்துக்கும் மியூசிக்ல ஒரு சேஞ்ச் தேவைப்பட்டுச்சு. அதனால தான் ஆதியை இதில் இசையமைப்பாளராகப் போட்டேன். ஹாரிஸூக்கும், ஆதிக்கும் வித்தியாசம் என்னன்னா? ஹாரிஸ் ரொம்ப சீரியஸா மியூசிக் போடுவார். ஆதி ரொம்ப ஜாலியா விளையாட்டா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பார் என்று மாற்றத்துக்கான பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்.
மேலும் கவணில் தனது வழக்கமான கதை, திரைக்கதை கூட்டணியான எழுத்தாளர்கள் சுபாவுடன், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவையும் இணைத்திருக்கிறார். எல்லாம் காரணமாகத்தான், படம் வரும் போது அதை நீங்களே தெரிஞ்சுப்பீங்க என்றார்.