விஜய் – மகேஷ்பாபு காம்பினேஷனில் ஒரு பிரம்மாண்டப் படம்! : ரெடியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழில் விஜய்க்கு எந்தளவுக்கு மார்க்கெட் இருக்கிறதோ அதே அளவுக்கு தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு மார்க்கெட் இருக்கிறது.
இந்த இரண்டு மாஸ் ஹீரோக்களையும் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அது ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தானே?
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா ? என்கிற கேள்வியை மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு இருமொழிப்படமாக வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகப் போகும் ‘ஸ்பைடர்’ பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பினார் ஒரு நிருபர்….
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ் “மகேஷ் பாபு – விஜய் ரெண்டு பேரையும் நான் தனித்தனியாக வைத்து படம் இயக்கி விட்டேன். இந்த இரண்டு பேர்களையும் ஒரே படத்தில் இயக்க ரெடியாகத் தான் இருக்கிறேன். இருவருமே அதற்கு சம்மதம் சொன்னால் ஆரம்பித்து விட வேண்டியது தான்.
ஹிந்தியில் பத்து, பதினைந்து ஹீரோக்கள் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேரும் முன்னணி ஹீரோக்களா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் இங்கு விஜய் – மகேஷ்பாபு இருவரையும் வைத்து ஒரே படம் எடுப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. இருவருக்குமே படத்தில் சரிசமமான காட்சிகளைக் கொடுக்க வேண்டும். விஜய்க்கு சாருக்கு ரெண்டு டூயட் கொடுத்தால் அதே போல மகேஷ்பாபு சாருக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டு பேருடைய ரசிகர்களும் கோபித்துக் கொள்வார்கள். எப்படியிருந்தாலும் அவர்கள் ஓ.கே என்றால் நானும் நல்ல கதையோடு படம் இயக்க ரெடியாகத்தான் இருக்கிறேன் என்றார்.
ஆனால், அப்படி இருவரையும் வைத்து ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமானது. தெலுங்கில் அதை பார்த்தால் மகேஷ் பாபு ரசிகர்கள், அவருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள், தமிழில் விஜய் ரசிகர்கள் அப்படி எதிர்ப்பார்ப்பார்கள். நான் ரெடியாகத்தான் இருக்கிறேன், ஆனால் அது நடப்பது ரொம்ப சிரமமான விஷயம்.” என்று பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, “ஸ்பைடர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படமாகும். அதனால் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும் ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் ரிலிஸானால் தான், அது முடியும் என்பதால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடுகிறோம். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா சாரில் கதாபாத்திரம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அதேபோல் பரத் கேரக்டரும் நன்றாக வந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் சந்தோஷ் சிவன் சார் உடன் பணிபுரிந்தது ரொம்ப மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக அவரது படத்தில் பணியாற்ற நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும்படி இப்படத்தை முருகதாஸ் சார் இயக்கியிருக்கிறார். இது நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.