திங்கட்கிழமை முதல் ஸ்ட்ரைக்! : பெப்ஸிக்கு செக் வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்
சினிமாவில் பெப்ஸி என்கிற தொழிலாளர் சங்கத்தில் உள்ளவர்கள் படப்பிடிப்புகளில் செய்யும் அடாவடிகளுக்கு அளவே இல்லை.
அவர்கள் கேட்பது தான் சம்பளம். இத்தனை ரூபாய் சம்பளம் என்றால் அதற்கு எத்தனை மணி நேரம் வேலை செய்வோம் என்பதையும் அவர்கள் தான் முடிவு செய்வார்கள். அந்த குறிப்பிட்ட மணி நேரத்தைத் தாண்டி ஒரு நிமிடம் போனாலும் அதற்கும் தனி சம்பளம்.
வெளியூருக்குப் போனால் அதற்கு தனி சம்பளம், வாஷிங் அலவன்ஸ் என ஏகப்பட்ட சலுகைகளை தயாரிப்பாளர்கள் கொடுத்து அழ வேண்டியிருக்கும்.
அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் எந்த தொழிலாளியை தன் படத்தில் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்க முடியாது. பெப்ஸி அமைப்பு தான் தீர்மானிக்கும்.
திடீரென்று ஒரு ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு கும்பலாக போவார்கள். அங்கு எங்களைத்தான் வேலைக்கும் வைக்க வேண்டும் என்று வம்படியாக உள்ளே புகுந்து வேலை செய்து அவர்களே அதற்கான சம்பளத்தையும் எழுதிக் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.
இப்படி பெப்ஸி அமைப்பினர் செய்யும் அடாவடிச் செயல்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கண்ணீர் விட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்ல காலம் கனிந்து வந்திருக்கிறது.
பொதுவாக பெப்ஸி அமைப்பிள் உள்ளவர்கள் தங்களது சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயங்களை தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்து பேசித்தான் முடிவு செய்வார்கள். ஆனால் த்ற்போதோ எந்தவித முன்னறிவிப்பும் இன்று தாங்களே தன்னிச்சையாக தங்களது புதிய ஊதிய உயர்வினை அறிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தகவலை கேள்விப்பட்டதும் அதிர்ச்சிடையடைந்த தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது :
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொழிலாளர்கள் சம்மேளனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிசையாக புதிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சியாகவும், மன உளைச்சலையும் தந்துள்ளது. இதனால் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களை கருத்தில் கொண்டும், நசிந்து கிடக்கும் தயாரிப்புத் தொழிலின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வருகிற ஜூலை 27- திங்கட்கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் பேச்சுவார்த்தை முடியும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.