‘பிக்பாஸ் 2’ பஞ்சாயத்து! – கமல் டென்ஷன்!
விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் ஒன் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது அந்த நிகழ்ச்சியின் சீசன் 2வாக ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி படப்பிடிப்புத் தளத்தில் பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக 400-க்கும் மேற்பட்டோர் செட் அமைத்தல், 60 கேமராக்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் ”செட்டில் பணிபுரியும் 400 பணியாளர்களில் கமல் உட்பட வெறும் 41 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் ஏனைய அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று குற்றம் சாட்டினர் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி.

மேலும் ”பிக்பாஸ் 2 படப்பிடிப்பில் தமிழக தொழிலாளர்களை அதிக அளவில் பணிக்கு அமர்த்த சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜூன் 25 வரை அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் ஜூன் 29 முதல் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்றும் எச்சரித்தார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? அந்த நிகழ்ச்சி டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக எண்டோமோல் நிறுவனம் ஃபெப்சி அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக ‘பிக்பாஸ் சீசன் ஒன்று’ நிகழ்ச்சியிலும் இதேபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கமல்ஹாசன் தலையிட்டு 50 சதவீதம் தமிழக தொழிலாளரை பணியமர்த்த செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது அதே பிரச்சனை சீசன் 2 விலும் எழுந்ததால் டென்ஷன் ஆன கமல் இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஆரம்பத்திலேயே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை கூப்பிட்டு கடிந்து கொண்டாராம்.
ஏற்கனவே ‘பிக்பாஸ் சீசன் ஒன்று’ போல சுவாரஷ்யமாக ‘சீசன் 2’ இல்லை என்கிற கருத்து சின்னத்திரை ரசிகர்களிடம் இருந்து வரும் சூழலில் ஃபெப்சி தொழிலாளர்களின் பிரச்சனை நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.