இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன்-சசிகுமார் கூட்டணியில் ‘சுந்தரபாண்டியன் 2’
கடந்த 2012 -ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த படம் ‘சுந்தர பாண்டியன்’. சசிகுமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமும் கூட!
‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார் சசிகுமார்.
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன், தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல், ‘சத்ரியன்’ என அடுத்தடுத்து தனக்கான அடையாளங்களைப் பதிவு செய்தார்.
சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் இருவரின் சமூக வலைத்தளங்களில் ‘சுந்தரபாண்டியன் கூட்டணி மீண்டும் எப்போது?’ என்கிற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. குறிப்பாக தென்மாவட்ட ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது இருவரிடமும் முன் வைக்கிற கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
அப்படிக் கேள்வி எழுப்பிய ரசிகர்களின் வேண்டுகோள் நிறைவேறப்போகிறது என்பதுதான் ஹாட் நியூஸ். தற்போது சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி ‘நாடோடிகள் 2’ படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்த கையோடு ‘சுந்தரபாண்டியன் 2’ படம் தொடங்கும் எனத்தெரிகிறது.
இந்த தகவல் தெரிந்ததும் நான்கைந்து தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பெனிக்கு படம் பண்ணிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வமான அதிரடியான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.