இராஜகுமான் ஹீரோ; பரத் வில்லன் : சூர்யாவை வியக்க வைத்த காம்பினேஷன்!

Get real time updates directly on you device, subscribe now.

surya1

யாருப்பா இந்தப் படத்துல ஹீரோ? என்று கேட்டு படம் பார்க்கப் போகிற காலமெல்லாம் கோலிவுட்டில் மலையேறி விட்டது.

ரகளையான ரசனைகளுடன் கூடிய படங்களில் கதை தான் ஹீரோ. அதனால் தான் பல கோடிகளில் தயாரிக்கப்பட்ட படங்களை விட நல்ல கதையம்சமுள்ள படங்கள் குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து விடுகின்றன.

ரசிகர்களின் இந்த ரசனை மாற்றத்துக்கு ஏற்ப இயக்குநர்களும் புதுப்புது கதைகளோடு களமிறங்குகிறார்கள். விஜய் மில்டனின் ‘கோலிசோடா’ படமும் இப்படியொரு வரவேற்பைத்தான் பெற்றது.

அந்த யதார்த்தமான வெற்றியைத் தொடர்ந்து விஜய் மில்டனிடம் அடுத்த படமாக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படம் ‘கடுகு’.

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். இந்தக் கதைக்கு அப்படிப்பட்ட குணம் கொண்ட ஹீரோ தான் வேண்டும் என்றதும் விஜய் மில்டன்

தேடிப்போன ஹீரோ யார் தெரியுமா? சொன்னால் ஷாக் ஆகி விடுவீர்கள்.

நடிகை தேவயானியின் வீட்டுக்காரரும் இயக்குநருமான இராஜகுமாரன்.

Related Posts
1 of 7

இந்தப் பேரைக் கேட்டதும் நாம் எப்படி ஷாக் ஆகிறோமோ? அதே ஷாக்கை தன்னை வைத்து படமெடுக்க வந்த விஜய் மில்டனிடமும் வெளிப்படுத்தியிருக்கிறார் இராஜகுமாரன்.

”சார் நீங்க நல்ல படங்கள் கொடுத்துட்டு நல்லாவே வளர்ந்துட்டு வர்றீங்க. இந்த நேரத்துல என்னை ஹீரோவா வெச்சு இப்படி ஒரு ரிஸ்க் தேவையான்னு கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜய் மில்டன் சொன்ன பதிலில் தான் விழுந்து உடனே நடிக்க சம்மதித்திருக்கிறார் இராஜகுமாரன்.

”சார் முதல்ல உங்களை நீங்க நம்பணும், அப்பத்தான் மத்தவங்க உங்களை நம்புவாங்க” என்பது தான் விஜய் மில்டன் இராஜகுமாரனிடம் சொன்ன அந்த அர்த்தமுள்ள பதில்.

புலிவேஷம் போடுகிற ஒரு சாதாரண மனிதன் தன்னை விட பெரிய மனிதனுடன் மோதும் போது என்னென்ன நடக்கிறது என்பது தான் கடுகு படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையின் திருப்பங்களாம்.

படம் தயாரானவுடன் பார்த்த சூர்யா அன்று இரவு தூங்கவே இல்லையாம். அந்தளவுக்கு படத்தின் கதையம்சமும் அதன் வீரியமும் சூர்யாவின் மனதை என்னென்னவே செய்திருக்கிறது. அதிலும் இராஜகுமாரன் ஹீரோவான இப்படிப்பட்ட ஒரு கதையில் எப்படி பரத் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதுவே சூர்யாவுக்கு பெரிய வியப்பாகவும், சர்ப்ரைஸாகவும் இருந்ததாம்.

அப்புறமென்ன?  தன் மனசுக்கு நெருக்கமான படமாகி விட்ட இதை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாகவே ரிலீஸ் செய்ய முன் வந்து விட்டார் சூர்யா.

இந்த மார்ச் 24 முதல் உலகமெங்கும் மணம் பரப்ப வருகிறது இந்த ‘கடுகு’!