தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்

RATING : 3/5
சமீபகாலமாக தொங்கலில் இருக்கும் ஜெய் சினிமா கேரியருக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் கூரியர் பாய் தான் இந்த ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’.
தஞ்சாவூரிலிருந்து கிளம்பி வந்து சென்னையில் இருக்கும் அக்கா வீட்டில் தங்கி தான் படித்த படிப்புக்கேத்த வேலையை தேடிக்கொண்டிருக்கிறார் ஜெய்.
வந்த இடத்தில் நண்பன் சந்தானம் வேலை செய்யும் கூரியர் கம்பெனியில் அவருக்குப் பதில் ஒரே ஒரு கூரியரை ஜெய் டெலிவரி செய்யப் போகிறார். போன இடத்தில் காதி கிராப்ட்டில் வேலை செய்யும் நாயகி யாமி கெளதமை கண்டவுடன் காதல். பிறகு தினமும் அவரைப் பார்ப்பதற்காகவே அந்தக் கூரியர் கம்பெனியில் தானும் வேலைக்குச் சேர்கிறார்.
இதற்கிடையே மருத்துவதுறையில் நடக்கும் மோசடி பற்றிய ரகசியங்கள் அடங்கிய கவர் ஒன்று சமூக ஆர்வலரான நாசருக்கு செல்ல ஜெய்யிடம் டெலிவரிக்கு வருகிறது. இதை அறிந்து அந்த கொரியரை கைப்பற்ற ஜெய்யை துரத்துகிறது அந்த மருத்துவ மோசடிக் கும்பல்.
கூரியரில் மரண பயத்தை காட்டும் அந்த வில்லன் கோஷ்டியிடமிருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
கெளதம் மேனன் படங்கள் என்றாலே நீளமாகவும் அழகாகவும் தமிழில் டைட்டில்கள் வைக்கப்படும். அந்த வகையில் அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இந்தப் படத்தின் அழகான தமிழ்ப்படுத்தப்பட்ட டைட்டிலுக்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
ஹீரோ, ஹீரோயின் காதல் என்பதையும் தாண்டி சமூகத்தில் குறிப்பாக மருத்துவத் துறையில் நடக்கும் கருமுட்டைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மோசடி குறித்து இந்தப்படம் ஒரு எச்சரிக்கை உணர்வைத் தருவதை வரவேற்கலாம்.
வழக்கமான அதே துள்ளலான நடிப்புடன் உற்சாகம் காட்டுகிறார் ஹீரோ ஜெய்.
ஹீரோயின் யாமி கெளதமை தினமும் பார்ப்பதற்காகவே விளம்பர துண்டு பிரசுரங்கள், சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தானே தயார் செய்து தினமும் அவருக்கு கூரியராக கொண்டு செல்லும் காட்சிகள் சுவாரஷ்யமானவை.
தாமதமாக ரிலீசாகும் படமென்பதாலோ என்னவோ பேர் அண்ட் லவ்லி அழகு தேவதை யாமி கெளதமிடம் அந்த விளம்பரத்தில் வெளிப்படுகிற ஜொலி ஜொலிப்பு இதில் முழுமையாக மிஸ்ஸிங்.
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்தை மீண்டும் இன்னொரு ஹீரோவின் படத்தில் காமெடியனாகப் பார்ப்பது காமெடி இல்லாத குறைக்கு கேரண்டி.
நாசர், தம்பி ராமையா, வி.டி.வி கணேஷ் ஆகியோர்களுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
வில்லன்களாக வரும் அஜீதோஷ் ராணா, டாக்டர் பிரேம்குமார் இருவரும் மிச்சம் வைக்காமல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
சத்யாவின் ஒளிப்பதிவும், பிரவீணின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்துக்கு சரிசமமாக ஈடுகொடுத்திருக்கிறது.
தம்பி ராமையா அனுப்புகிற கூரியரில் என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது என்கிற விபரம் முன்பாகவே ரசிகர்களுக்கு காட்சிகள் வழியாக சொல்லப்பட்டு விடுவதால் இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை நகர்வு இப்படித்தான் அமையும் என்று ரசிகர்கள் ஈஸியாக யூகித்து விடுகிறார்கள். அந்த விஷயத்தில் இன்னும் கொஞ்ச நேரம் சஸ்பென்ஸை நீட்டித்திருக்கலாம் டைரக்டர் சார்!
வழக்கமான காதல் கதையோடு மருத்துவத் துறையில் நடக்கும் ‘ஸ்டெம்செல்ஸ்’ என்கிற கருமுட்டை மோசடியையும் திரைக்கதையாக்கி படமாக்கி தந்த விதத்தில் அறிமுக இயக்குநர் பிரேம் சாய் கவனிக்க வைக்கிற இயக்குநராகியிருக்கிறார்.