பசங்க 2 – விமர்சனம்
Rating : 3.9/5
‘பசங்க’ படத்தில் கிராமத்து குழந்தைகளின் குறும்புத்தனங்களையும், சேட்டைகளையும் அச்சு பிசகாமல் திரையில் காட்டிய பாண்டிராஜ் இதில் நகரத்து குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை பிரதிபலித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் உணர்வுகளோடு பெற்றோர்கள் எந்தளவுக்கு விளையாடுகிறார்கள். அதனால் மனதளவில் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக கொண்டு வந்திருக்கிறார்.
நிஷேஷ் என்ற சிறுவனையும், வைஷ்ணவி என்ற சிறுமியையும் சுற்றித்தான் நகர்கிறது கதை. இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் செய்யும் குறும்புத்தனங்களும் சுட்டித்தனங்களும் மற்றவர்களுக்கு சேட்டைகளாகத் தெரிகிறது.
அதன் விளைவு!
படிக்கும் பள்ளியையும், தங்கியிருக்கும் வீட்டையும் பெற்றோர்களுக்கு அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல். நிம்மதியாக தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது என்கிற நிலையில் தான் வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.
அந்த முடிவு குடும்பத்துக்குள்ளும், குழந்தைகளின் மனதுக்குள்ளும் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? என்பதே கிளைமாக்ஸ்.
ஒரு குழந்தையை வைத்து ஒரு சீனை எடுத்து முடிக்கவே பல இயக்குநர்களுக்கு கடலளவு பொறுமை தேவைப்படும். அப்படிப்பட்ட சூழலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை நடிக்க வைத்து எந்த ஒரு காட்சியிலும் நாடகத்தனமோ, நடிக்கிறோம் என்கிற உணர்வோ திரையில் தெரியாத வண்ணம் தனித்தனி பாத்திரங்களாக உலாவ விட்ட இயக்குநர் பாண்டிராஜுக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்!
நிஷேஷ், வைஷ்ணவி இரண்டு குழந்தைகளுமே புதுமுகங்கள் தான். ஆனால் நடித்திருக்கிறார்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. மாறாக நம் பக்கத்து வீட்டு குழந்தைகளை நேரில் பார்க்கிற ஒரு எண்ணத்தை தான் முழுப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.
பெண் குழந்தை செய்யும் சேட்டைகளைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் ஆண் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் என்பதெல்லாம் தாங்குவது ரொம்பக் கஷ்டம். அப்படி ஒரு வலியை படம் முழுக்க காமெடியோடு வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளுகிறார் முனீஸ்காந்த் ராமதாஸ். அதோடு பேங்க் மேனேஜரான அவர் போகிற இடங்களில் எல்லாம் தனக்குப் பிடித்தமான சின்னச் சின்ன பொருட்களை திருடும் பழக்கத்தை விட முடியாமல் தவிப்பதும், அதற்கு மருத்துவம் பார்ப்பதற்காக டாக்டரிடம் போய் வரும்போது அவருடைய ஸ்டெதஸ்கோப்பை திருடிக்கொண்டு வந்து விடுவதும் காமெடியின் உச்சம்.
அவரின் மனைவியாக வரும் நித்யாவும், பெண் குழந்தைக்கு அப்பாவாக வரும் கார்த்திக்குமாரும், அம்மாவாக வரும் பிந்துமாதவியும் கனமான பாத்திரத் தேர்வு.
குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து சந்தோஷப்படும் பெற்றோர்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணரும் நிஜ வாழ்க்கை கூத்தெல்லாம் படத்தில் உண்டு.
”அப்பா இந்த ஸ்கூல்ல படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம்னு சொல்றீங்க. இப்படித்தானே எல்லா குழந்தைகளோட அப்பா, அம்மாவும் ஆசைப்படுவாங்க ஆனா பர்ஸ்ட் ரேங்க் ஒண்ணு தானேப்பா இருக்கு” என்று வைஷ்ணவி கேள்வி கேட்பதும் அதற்கு கார்த்திக் குமார் பதில் சொல்ல முடியாமல் திணறுவதும் நல்ல கலகலப்பு.
இப்படிப்பட்ட கலகலப்பான காட்சிகளை ஆங்காங்கே வைத்து படத்தின் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் புத்திசாலித்தனமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
புதுமுக குழந்தைகளே நடிப்பு என்பதே தெரியாத வண்ணம் திரையில் இயல்பாக நடிக்கிறார்கள். ஆனால் பல படங்களில் நடிப்புத் திறமையை காட்டி விட்ட சூர்யாவும், அமலாபாலும் ”நடிக்கிறார்கள்” என்பதை அதே திரை அப்பட்டமாக காட்டிக் கொடுத்து விடுகிறது. அதிலும் சூர்யா பேசும்போதும், குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும்போது ஏதோ அவர் நடித்த விளம்பரப் படங்கள் தான் நம் கண்முன்னே வந்து வந்து போகிறது.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ”கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை பார்க்கிற டீச்சர்கள் எல்லாம் முதல்ல தங்களோட பிள்ளைகளை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்க்கணும்னு சட்டம் கொண்டு வரணும்” என்று போகிற போக்கில் பஞ்ச் அடித்து விட்டுப் போகிறார் சமுத்திரக்கனி.
பாலசுப்ரமணியெத்தின் கேமரா கலர்ஃபுல் கலக்கல் என்றால் அரோல் கொரெலியின் பின்னணி இசையும், பாடல்களும் காதுகளை உறுத்தாமல் கவர்கின்றன.
”குழந்தைங்க ‘கெட்ட வார்த்தைகள்’ பேச மாட்டாங்க… ‘கேட்ட வார்த்தைகளை’த் தான் பேசுவாங்க”
”நாங்க நல்ல ஸ்கூலை நம்பறவங்க இல்லை. எங்கள் பிள்ளைங்களை நம்புறவங்க” போன்ற கைதட்டல்களை அள்ளக்கூடிய அர்த்தமுள்ள வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம்.
இன்றைய குழந்தைகளை குறிவைத்து பெரு வணிக நிறுவனங்களும், மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் எந்தளவுக்கு பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை துணிச்சலுடன் திரையில் தோலூரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். எந்த அவார்டு பங்ஷனாக இருந்தாலும் அதில் சிறந்த படத்துக்கான அவார்டு இந்தப் படத்துக்கு கன்பார்ம்!
தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்கள் போக்கில் வளரவிட்டு, அவர்களுக்கு பிடித்ததை செய்யவிட்டு, அதை ரசிக்க நாம் முன் வந்தாலே போதும். குழந்தைகள் சமூகத்தில் தானாக வாழக்கற்றுக் கொள்ளும் என்கிற நிதர்சன உண்மையைச் சொன்ன இயக்குநர் பாண்டிராஜூக்கும் இப்படிப்பட்ட நல்ல சமூகக் கருத்துள்ள படத்தை தனது பேனரில் தயாரிக்க முன்வந்த சூர்யாவுக்கும் வலி வருகிற வரைக்கும் கைகுலுக்கி கொடுப்போம் ஒரு பெரிய சைஸ் போக்கே!
பசங்க 2 – அம்மாக்களும் – அப்பாக்களும் பார்த்தே தீர வேண்டிய குழந்தைகளுக்கான படம்!