அதே செண்டிமெண்ட்! ஆனா அஜித் மட்டும் இல்லை!! : இனிதே துவங்கியது ‘தல 57’
அஜித்தின் புதிய படத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் முதலில் ரூமராகி நாட்கள் நெருங்க நெருங்க அதுவே உண்மையும் ஆகி விடுகிறது.
‘வேதாளம்’ படத்துக்குப் பிறகு மருத்துவ ஓய்வில் இருந்த அஜித்தின் 57 வது படம் எப்போது? யாருடன்? என்பது தான் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்த மில்லியன் டாலர் கேள்வி?
அடுத்த படமும் சிறுத்தை சிவா தான் என்று இயக்குநர் முடிவாகி விட்டாலும் தயாரிப்பாளர் யார்? என்கிற கேள்வி தொக்கி நின்ற போது சத்யஜோதி பிலிம்ஸ் தான் தலயிடம் தலையை கொடுத்திருக்கிறது என்றது காத்து வாக்கில் வந்த செய்தி.
அஜித்துக்கு அட்வான்ஸ் பெமண்ட்டெல்லாம் கொடுத்து விட்டு தயாரிப்பு தரப்பு காத்திருக்க, எப்போது எப்போது என்கிற கேள்விக்கு இன்று அதிகாரப்பூர்வமான விடை கிடைத்தது.
இன்று நிறைந்த முகூர்த்த நாள் என்பதால் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேரும் புடை சூழ ‘தல 57’ படத்தின் துவக்க விழா அஜித்துக்கு செண்டிமெண்ட் கடவுளான கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் எளிமையாக நடந்தேறியிருக்கிறது.
‘வேதாளம்’ படத்தில் பணியாற்றி இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ரூபன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் இந்தப்படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்திருக்கிறார்கள்.
பொதுவாக தான் நடிக்கின்ற எந்த படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்ளாத அஜித் வழக்கம் போல இந்தப் படத்தின் துவக்க விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
அதே போல படத்துக்கும் டைட்டில் வைக்கப்படவில்லை.