மீண்டும் திருட்டுக் கதை புகாரில் சிக்கிய டைரக்டர் அட்லீ!
‘மெர்சல்’ படத்தில் கதை தழுவல் புகாரில் சிக்கிய டைரக்டர் அட்லீ, தற்போது இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் கதைப்புகாரில் சிக்கியிருக்கிறார்.
கே. பி செல்வா என்கிற உதவி இயக்குனர் அட்லீ மீது இந்த புகாரை கூறியிருக்கிறார்.
தனக்கும், இயக்குனர் அட்லீயிடம் நெருக்கமான நட்பில் இருக்கும் உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், ‘அருவி’ பட நாயகி அதிதி பாலன் ஆகியோரிடம் தன் கதையை பகிர்ந்திருக்கிறார் செல்வா. இவர்களில் யாரோ ஒருவரின் மூலமாகத்தான் தன்னுடைய கதை அட்லீயிடம் பகிரப்பட்டிருக்கிறது என்பது செல்வாவின் குற்றச்சாட்டாகும்.
இது சம்பந்தமாக உதவி இயக்குனர் கே.பி. செல்வா இயக்குனர் அட்லீயின் அலுவலகத்து சென்று கேட்ட போது ”உங்கள் கதையைத் தான் நாங்கள் படமாக்கி வருகிறோம் என்று சொன்னவரை எங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். அதன்பிறகு இந்த விஷயத்தில் மேற்படி என்ன செய்ய வேண்டுமோ? அதைச் செய்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.
இதையடுத்து பஞ்சாயத்தை எழுத்தாளர் சங்கத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஜனவரி மாதம் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட அங்குள்ள நிர்வாகிகள் ”உங்கள் பக்கம் நியாயம் இருப்பது போலத் தெரிகிறது” என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்லியிருக்கிறார்கள்.
சரியாக ஒரு மாதம் கழித்து எழுத்தாளர் சங்கத்திலிருந்து கே.பி.செல்வாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ”நீங்கள் இந்த சங்கத்தில் தற்காலிக உறுப்பினராக சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை. ஒருவர் உறுப்பினர் ஆன ஆறு மாதங்கள் கழித்தே கதைப்புகார் அளிக்க வேண்டும் என்று சங்கத்தில் விதி இருப்பதால் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை” என்று பதில் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த ஒருமாத இடைவெளியில் கே.வி. செல்வா என்பவர் யார்? என்னென்ன படங்களில், யாரிடமெல்லாம் பணியாற்றியிருக்கிறார்? பின்னணி என்ன? போன்றவற்றை அட்லீயின் விசுவாசிகள் விசாரித்திருக்கிறார்கள்.
இப்போது சங்கத்தில் உறுப்பினராகி ஆறு மாதங்கள் ஆகி விட்டதால் மீண்டும் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறார் கே.பி.செல்வா. ஒருவேளை அதில் நியாயம் கிடைக்கா விட்டால் நீதிமன்றம் செல்ல முடிவு செய்திருக்கிறாராம்.