‘ஓ’ போட்டு நன்றியை தெரிவித்த சீயான் விக்ரம்!
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் – நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை- என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில்,
” இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை. அதனை செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் ஒரு ‘ஓ’ போட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்.
படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்து அற்புதமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கும் நன்றி. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமானது. இந்த படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர்தான். படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விசயத்தை .. நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. இதற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்து வருகை தந்த என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.