‘மஞ்சள் நீராட்டு விழா’ : போற இடமெல்லாம் அவார்டு வாங்குது இந்த குறும்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

yello

குறும்பட இயக்குநர்களில் வரிசையில் கமல் சேது தயாரித்து இயக்கிய ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற குறும்படம் வித்தியாசமான முயற்சியாக இருந்தது.

‘The Yellow Festival’ என்ற இங்கிலீஷ் டைட்டிலோடு திரையிடப்பட்ட இப்படத்தில் தீபா ஷங்கர், நேஹா, பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கவர்ந்தனர்.

பொதுவாகவே இந்த மஞ்சள் நீராட்டு விழாவைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். இந்த உலகில் ஒரு குழந்தையாகப் பிறந்து, குறும்புத்தனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதை தான் இந்த மஞ்சள் நீராட்டு விழா என்று புதிய விளக்கம் கொடுத்த இயக்குநர் கமல்

இந்த திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் விருதுகளை வாரிக்குவித்து வருகிறது என்கிற சந்தோஷ செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது உலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.
சிம்லா நகரில் நடைபெற்ற முதலாவது உலகப் பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது.

நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்தாவது ஹார்லெம் உலகப்பட விழா, இந்தியாவில் மும்பை நகரில் நடந்த மூன்றாவது உலகப்பட விழா, ஹைதராபாத்தில் நடைபெற்ற 19வது குழந்தைகள் திரைப்பட விழா ஆகிய மூன்று விழாக்களிலும் சிறந்த படத்துக்கான விருது.

என்று அடுத்தடுத்து விழாக்களில் விருதுகளை குவிக்கு இந்தப்படத்தின் கதை தான் என்ன?

முகத்தில் குழந்தைத்தனம் மாறாத பள்ளிச் சிறுமியான நேஹா பூப்பெய்தி விடுகிறாள். கலாச்சார வழக்கப்படி அவளை வீட்டின் பின்புறத்தில் படப்பு கட்டி உட்கார வைத்து விட்டு ஊரைக் கூட்டி சடங்கு செய்யும் வரை படப்புக்கு வெளியே, அங்கே இங்கே அசையக் கூட அனுமதி இல்லை.

ஆனால் நேஹாவுக்கோ அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளியில் நடக்கப்போகும் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று வருத்தம்.

நேஹாவின் அம்மாவான தீபா சங்கர், சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர். அவர் பெரிய மனுஷி ஆனபோது சடங்கு செய்ய என்று அவருக்கு யாரும் இல்லை. அதனால் நான் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சமில்லை என்று சொல்லி அழும் அவர் அதனால் தான் எனக்கு வந்த அவமானங்கள் உனக்கு வந்து விடக்கூடாது என்று இந்த மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துகிறேன் என்று அந்த விழாவை வெறுக்கும் மகளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

ஆனாலும் அம்மா சொல்வதைக் கேட்காத நேஹா ஒரு நிலையில் மனம் வெறுத்து வீட்டை விட்டு ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்.

அதன்பிறகு அம்மாவுக்கும், மகளுக்கும் உள்ள புரிதல் எப்படி நகர்கிறது என்பதை மிக இயல்பாக இயக்கியிருக்கிறார் கமல் சேது.

குறைந்த கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு வாசலில் கோலம் போடுவதை பெண்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கதையை நகர்த்திக் கொண்டு போய் கைதட்டல்களை வாங்குகிறார் இயக்குநர் கமல் சேது.

“மற்ற நாடுகள்ல எல்லாம் வீட்டுக்குள்ள போன பிறகுதான் வரவேற்பு கொடுப்பாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வீட்டுக்கு வெளியவே வந்து நின்னு வருபவர்களை வாங்கன்னு வரவேற்போம் ” என்ற ஒற்றை வரி வசனமே படத்தின் தரத்தை திரையில் காட்டி விடுகிறது.

அப்படிப்பட்ட இந்தப் படத்தை நீங்கள் யு டியூப்பில் பார்த்து ரசிக்கலாம்.