சுழல் வெப்சீரிஸ் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அமேசான் ப்ரைம் முதல்முறையாக தமிழில் நேரடியாக தயாரித்துள்ள வெப்சீரிஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளது சுழல் வெப்சீரிஸ். புஷ்கர்& காயத்ரி இருவரும் இந்தக்கதையை எழுதி, பிரம்மா 4 எபிசோட்களையும், அணுசரண் 4 எபிசோட்களையும் இயக்கி இருக்கிறார்கள். கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸின் கதை, சமூகத்தில் ஊன்றப்பட வேண்டிய விதை.

கொங்கு தமிழகத்தில் சாம்பலூர் என்ற கிராமத்தில் ஒரு ஆலைக்கு எதிராக பார்த்திபன் தலமையில் ஒரு போராட்டம் நடக்கிறது. அதிலிருந்து ஓரிரு நாட்களில் அந்தப்பேட்ரிக்கு தீ வைக்கப்படுகிறது. அன்றே பார்த்திபனின் மகளும் காணாமல் போகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கான காரணர்கள் யார் என்பதை கண்டறிவதே சுழலின் கதை

இந்த வெப்சீரிஸின் முதல் சப்ரைஸே நடிகர்களின் நடிப்பு தான். துளி கூட எதார்த்தம் மாறாமல் நடித்துள்ளார்கள் அனைவரும். கதிர் ஒரு எஸ்.ஐ. அவர் எஸ்.ஐக்கான உடல்மொழியை பக்காவாக கொண்டு வந்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி இருக்கிறது. பார்த்திபன் ஒருசில இடங்களில் மிகச்சிறப்பாக நடித்து கலங்க வைக்கிறார். ஸ்ரேயா ரெட்டி இன்ஸ்பெக்டர் கேரக்டருக்குப் பக்காப் பொருத்தமாக இருக்கிறார்.

இந்த சீரிஸின் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு அம்சம் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு. முகேஷின் ஒளிப்பதிவுக்கு பெரிய சபாஷ். சாம் சி எஸ் பின்னணி இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருசில இடங்களில் மட்டும் அதிக இரைச்சல். எடிட்டிங், CG வொர்க்கிலும் நல்ல நேர்த்தி. புஷ்கர்& காயத்ரியின் வசனங்களும் ஷார்ப்

இதுதான் என நாம் அணுமானிக்கும் பல விசயங்களை இல்லை என்று அடுத்த முடிச்சுப் போட்டு பயணிக்கும் திரைக்கதை பரபரப்பை ஏற்றிக்கொண்டே இருக்கிறது..

செக்ஸுவல் அபியூஸ் குறித்த உரையாடல், அங்காங்கே தெறிக்கும் அரசியல் வசனங்கள், மத அரசியலைப் பற்றிய சாடல் என போகிற போக்கில் சுழல் நிறைய விசயங்களைச் சொல்கிறது. துளியும் போராடிக்காத வகையில் ட்ராவல் ஆகும் 8 எபிசோட்களையும் ஒரே டேக்கில் கூட பார்க்கலாம்

3.5/5