தொடரி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

thodari-movie-review

RATING : 3/5

‘தொடரி’ என்கிற டைட்டிலுக்கு ஏற்றாற் போல ஒரு ரயிலில் நடந்து முடிகிற கதை.

டெல்லியிலிருந்து சென்னை வரும் ரயிலில் பேன்ட்ரி பாயாக வேலை செய்கிறார் நாயகன் தனுஷ். அதே ரயிலில் பிரபல நடிகைக்கு ”டச்சப் கேர்ள்” ஆக வருகிறார் நாயகி கீர்த்தி சுரேஷ். பார்த்த மாத்திரத்திலேயே கீர்த்தி சுரேஷ் அழகில் தனுஷ் சொக்கி விழ, காதலை கன்பார்ம் பண்ண தனக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் ஏழு ஜென்ம பழக்கம் என்கிற ரீதியில் கதை விடுகிறார்.

படம் பார்க்கிற ரசிகனே அதை நம்ப மாட்டான். ஆனால் நாயகியான கீர்த்தி சுரேஷ் தான் பாடகியாகிற ஆசையில் நம்புகிறார். அதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு லூசுப் பெண் போல காட்டியிருக்கிறார்கள்.

இருவருக்கும் காதல் வளர வளர அதே ரயிலில் பயணம் செய்யும் அமைச்சரான ராதாரவியின் பாதுகாவலர் ஹரிஷ் உத்தமனுக்கும் தனுஷுக்கும் உன்னை எனக்குப் பார்க்கவே புடிக்கல என்கிற ரீதியில் வம்படியாக மோதல் ஏற்படுகிறது.

இந்த டென்ஷன்களுக்கு நடுவே ரயில் டிரைவரான ஆர். வி. உதயகுமாருக்கு நெஞ்சு வலி வந்து சரிந்து விட விளைவு விபரீதமாகிறது. அதுவரை மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் அதன்பிறகு 120 கிலோ மீட்டரில் வேகம் எடுக்கிறது. அந்த இக்கட்டிலிருந்து தப்பித்து நாயகன், நாயகியோடு ரயிலில் பயணம் செய்த 750 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஆபத்து சூழ ரயிலில் பயணிப்பவர்கள் அத்தனை பேரும் பிழைப்பார்களா? மாட்டார்களா? என்கிற சிந்தனையில் படம் பார்க்கிற ரசிகர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு காட்சியை சீரியஸாகப் ரசித்துக் கொண்டிருக்க, அந்த இடத்தில் தனுஷும் – கீர்த்தி சுரேஷும் டூயட் ஒன்றை பாடுவார்கள் பாருங்கள்! அங்கேயே சொதப்பலின் மொத்த உருவமாக வந்து பல் இளிக்கிறது இயக்குநரின் திரைக்கதை யுக்தி.

ரயிலில் இருப்பவர்கள் அத்தனை பேர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த பிறகும் ஆளாளுக்கு சிரித்துக் கொண்டும், கலாய்த்துக் கொண்டும், அவ்வளவு ஏன் மொபையில் லைவ்வாக டிவியைப் பார்த்துக் கொண்டுமான ஏகப்பட்ட அபத்தங்களும் கீறல் விழுந்த ரெக்கார்டராய் கிழிந்து தொங்குகிறது கதையின் சீரியஸ்னஸ்.

Related Posts
1 of 15

இப்படி படம் முழுக்கத் தெரியும் பல அபத்தங்களுக்கு மத்தியில் தனுஷின் லந்தான நடிப்பும், தம்பிராமையாவுடனான அவருடைய காம்போ காமெடியும் ஆறுதல். கூடுதலாக அரசியல்வாதியாக வரும் ராதாரவி ஒரு பெட்டிக்குள் உட்கார்ந்து கொண்டே காட்டும் கம்பீரமான நடிப்பில் நம்மை எக்ஸ்ட்ராவாகவே கவர்கிறார்.

ஹாலிவுட்டே தேடி வந்து கூட்டிப்போகிற திறமைசாலியான தனுஷுக்கு தீனிபோடாமல் இவ்வளவு தூரத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்வது சரியா டைரக்டர் சார்..?

நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகனில் பேரழகியாய் இருப்பார். ஆனால் இதில் அடக்கன்றாவியே…? என்று சொல்கிற அளவுக்கு வித்-அவுட் மேக்கப்பில் பார்க்கிற ரசிகர்களை கதற விட்டிருக்கிறார். பொதுவாகவே பிரபு சாலமன் படங்கள் என்றால் முழுப்படத்திலும் யதார்த்தம் வழிந்தோடும். இந்தப் படத்தில் அது முக்கால்வாசி மிஸ்ஸாகியிருக்கிறது.

ரயிலை தீவிரவாதிகள் கடத்துகிறார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்க, அவ்வளவு சீரியஸான நேரத்திலும் தம்பி ராமைய்யாவை வைத்து கருணாகரன் காமெடி செய்வதெல்லாம் எந்த வகையான காமெடியில் சேர்த்தி என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ரயின் எஞ்சின் பெட்டியிலிருந்து பயணிகள் இருக்கும் பெட்டிக்கு நாயகி கீர்த்தி சுரேஷ் வருவதற்கான வாய்ப்புகள் பல இருந்தும் ரயில்வே அதிகாரியான ஏ.வெங்கடேஷ் அவரை மட்டும் பாதுகாக்க முன் வரத் தயங்குவது ஏன்? அதேபோல ரயில் இஞ்சின் இருக்கும் பெட்டியின் வாயிற்கதவை திறக்க ஒரு ஹெலிகாப்டரை அனுப்புகிற ரயில்வே நிர்வாகம் 750 பயணிகளை காப்பாற்றும் பொறுப்பில் இருக்கிற தனுஷ் – கீர்த்தி சுரேஷ் ஜோடியை மட்டும் காப்பாற்ற ஹெலிஹாப்டரை அனுப்பாமல் இருப்பது அப்பட்டமாகத் தெரியும் பிழை.

பெரும்பாலான காட்சிகளில் சி.ஜி தொழில்நுட்பமே ஆக்கிரமித்திருந்தாலும் ரயில் பெட்டிகளின் உள் அறைகள், வானம், மேகங்கள், மலை பிரதேசங்கள், மரம் செடி கொடிகள் என ஒளிப்பதிவு மனசுக்கு இதம். இமானின் பின்னணி இசையில் பிரபு சாலமனின் முந்தைய படங்களின் பின்னணி சாயல் தான். பாடல்களில் அந்த லெவல் ஈர்ப்பு குறைவே.

டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக நிகழ்ச்சிகளை நடத்தும் அத்தனை டிவி சேனல்களை முடிந்தவரை கலாய்த்து கிழித்து தொங்க விட்டிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். பதிலுக்கு அவங்களும் வெச்சு செய்றதுக்கு வசதியா உங்க வண்டி மாட்டிக்கிச்சே சார்…

தொடரி – மிதமிஞ்சிய வேகம்!