மான்ஸ்டர் – விமர்சனம் #Monster
RATING – 3.5/5
எறும்புக்குக் கூட தீங்கு செய்யக் கூடாது என்கிற வள்ளலாரின் கொள்கைப்படி வாழ்ந்து வருபவர் ஹீரோ சூர்யா.
அவர் புதிதாக வாங்கி குடியேறும் வீட்டில் எலி ஒன்று தூங்க முடியாத அளவுக்கு அட்டாகாசங்கள் செய்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதே மீதிக்கதை.
எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே பார்க்கலாமா? என்று யோசிக்கும் ரசிகர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு கொஞ்சமாவது ஆபாசம் இருக்கும். ஆனால் இந்தப்படம் அவருடைய வழக்கமான ஃபார்முலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டு குழந்தைகளும், பெண்களும் ரசிக்கக் கூடிய வகையில் எந்த ஒரு ஆபாசமும், வன்முறையும் இல்லாமல் ரசிக்கக் கூடிய வெளியாகியிருக்கிறது.
பல படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஓவர் ஆக்டிங் போல இருக்கும். ஆனால் இதில் அளவான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் வீட்டுக்குள் எலி எதையாவது உருட்டுகிற சத்தம் கேட்கிற போதெல்லாம் வெளிப்படுகிற அவருடைய முகபாவனைகள் ஆஹா அபாரம்!
அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறது எலி. சாதாரண எலி தானே? அது என்ன செய்து விடும் என்று யோசிக்கும் போதெல்லாம் அது செய்யும் புத்திசாலித்தனமான குறும்புகளை மெய்மறந்து ரசிக்கலாம்.
நாயகி பிரியா பவானி சங்கருக்கு படத்தில் நடிக்கிற வாய்ப்புகள் குறைவு தான். என்றாலும் அவருக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்குமான காதல் காட்சிகள் சுவாரஷ்மான கவிதை.
வழக்கமாக காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றும் கருணாகரன் இதில் டைமிங்கில் அடிக்கும் வசனங்களில் உண்மையிலேயே மனம் விட்டு சிரிக்க வைக்கிறார். இனி வரும் படங்களிலும் அந்த அளவில் இருந்தால் நலம்.
இப்படி சிலாகிக்க பல நிறைவான விஷயங்கள் இருந்தாலும் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட எலியைப் போல ஒரு கட்டத்துக்கு மேல் காட்சிகள் வீட்டைச் சுற்றியே நகர்வதால் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
பாடல்களிலும், பரபரப்பான பின்னணி இசையிலும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர். சிறிய சைஸ் ஓட்டைக்குள் கூட எலி புகுந்து செல்லும் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திக் காட்டியதில் கைத்தட்டல்களுக்கு உரியவர் ஒளிப்பதிவாளர் கோகுல்.
வழக்கமான தமிழ்சினிமாத்தனம் எதுவும் இல்லாமல், ஒரு எலியை வைத்து திரைக்கதை அமைத்து காட்சிகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
மான்ஸ்டர் – குட்டீஸ் ஸ்பெஷல்!