தூங்கா வனம் – விமர்சனம்
Rating : 3.4/5
பிரான்ஸ், லக்ஸம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் 2001ம் ஆண்டு ரிலீசான படம் ஸ்லீப்லெஸ் நைட். பிரெஞ்சு மொழியில் ரிலீசான இந்தப்படம் ரிலீசான வேகத்திலேயே பிரான்சில் மிக அதிக வசூலை அள்ளி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ( இப்போதெல்லாம் எங்கிருந்து சுடப்பட்டது என்கிற விபரம் உடனுக்குடன் வெளியாகி விடுவதால் இந்த ஜாக்கிரதைத்தனம் வந்திருக்கலாம்!) முறையாக அனுமதி வாங்கி தமிழில் ‘தூங்காவனம்’ ஆக்கி தனது சிஷ்யர் ராஜேஷ் ம செல்வாவுக்கு தனது பேனரிலேயே இயக்குநராக புரமோஷன் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் கமல்.
பத்து கிலோ போதைப்பொருளை கடத்துவதற்காக மேம்பாலம் ஒன்றில் தூப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கிறது. இதில் போலீஸ் அதிகாரிகளான கமல்ஹாசனும், யூகிசேதுவும் முக்கிய பங்காற்றி அந்த பையை கைப்பற்றி விடுகிறார்கள்.
பையைக் கைப்பற்றிய நிம்மதியில் வீட்டுக்கு வந்து மகனை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு வேலைக்கு திரும்புகிறார் கமல். ஆனால் பள்ளிக்குச் சென்ற மகன் வீடு திரும்பவில்லை.
பிரிந்து போன கமலின் மனைவி ஆஷா சரத் கமலிடம் மகன் வந்து விட்டானா என்று கேட்க, கண்டிப்பாக வந்து விடுவான் என்று உத்தரவாதம் தருகிறார். அப்போது தான் நைட்கிளப் முதலாளியான பிரகாஷ்ராஜிடமிருந்து கமலுக்கு அழைப்பு வருகிறது.
அந்த பையைக் கொடுத்து விட்டு உன் மகனை நீ மீட்டுக்கொள் என்கிறார்.
இன்னொரு பக்கம் கிஷோர், த்ரிஷா என சக உயர் போலீஸ் அதிகாரிகளும், போதைப்பொருள் கடத்தல் கும்பலான சம்பத் தலைமையிலான கும்பலும் கமலிடமிருந்து அந்த போதை பையை பறிக்க முயற்சிக்கிறது.
இவர்களுக்கு மத்தியில் நடக்கும் நீயா? நானா? போட்டியில் கமல் எப்படி தனது மகனை மீட்டார் என்பதே கிளைமாக்ஸ்.
தமிழில் ஹாலிவுட் தரத்தில் ஒரு நேர்த்தியான படம் என்பது வெறுங்கனவாக இருந்தது. அந்தக்குறையை முழுமையாகப் போக்கியிருக்கிறது இந்த தூங்காவனம்.
தமிழில் இதற்கு முன்பு எத்தனையோ போதைப்பொருள் கடத்தல் கதைகள் வந்துள்ளன. ஆனால் அவைகளில் இல்லாத விறுவிறுப்பும், நேர்த்தியும் இந்தப் படத்தில் இருப்பது அருமை.
வழக்கம் போல கமல் படங்களில் இருக்கும் 10 முறை காது கொடுத்துக் கேட்டாலும் புரியாத வசனங்கள், தனக்கான இடம் என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கதைக்கு தேவையான வேகத்தை மட்டும் திரைக்கதையில் செய்திருக்கிறார். ”உன்னைத் தவிர எனக்கு இந்த உலகத்துல எதுவுமே முக்கியமில்லடா…” என்று மகனிடம் பேசும் காட்சியில் ரசிகர்களின் மனசும் கரைந்து போகிறது.
கதையின் முக்கிய பாத்திரமாக வரும் இன்சோம்னியா நைட் கிளப், கேரக்டர்களிலும், காட்சிகளிலும் செய்த சின்னச் சின்ன மாற்றங்களைத் தவிர திரைக்கதையில் கமல் செய்த வித்தை என்று பார்த்தால் எதுவுமில்லை. அந்த வகையில் படத்தின் வெற்றி முழுக்க முழுக்க ஒரிஜினல் ஃப்ரெடரிக் ஜார்டின் மற்றும் நிக்கோலஸ் ஜாடாவையே முழுப்புகழும் போய்ச் சேரும்.
நைட் கிளப்பின் முதலாளியாக வரும் பிரகாஷ்ராஜ் முதல் யூகிசேது வரை கமலுக்குப் பிடித்த அத்தனை நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். உமா ரியாஸ், சந்தானபாரதி போன்ற சிலர் வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகிறார்கள்.
”இவங்க மூணு பேருக்குள்ளேயும் அப்படி என்ன தான் சார் பிரச்சனை. மைதா மாவுக்காக இப்படி அடிச்சிக்கிறாங்களே..?” என நைட்கிளப் கிச்சசில் சாம்ஸ் அடிக்கும் காமெடி பஞ்ச்சுகள் நல்ல ரகளை.
விஜயசாந்திக்குப் பிறகு சினேகா வரை பல நடிகைகள் ஆக்ஷனில் பங்களிப்பு செய்திருந்தாலும் இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா கிச்சனில் போடும் அந்த பரபர சண்டைக்காட்சி உண்மையிலேயே தி கிரேட் ஜாப்.
கமலின் மகனாக வரும் அமன் பெர்பெக்ட் சாய்ஸ். மகனை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு நாளைக்கு வெளியில கூட்டிட்டுப் போறாம்பா, ஸாரி என்பார் கமல். அதற்கு நான் என்ன அம்மாவா..? என்று கேட்டு விட்டு திரும்பாமலேயே கைகாட்டி தனது கோபத்தை வெளிக்காட்டும் இடம் பிரமாதம்.
நைட் கிளப்பின் சந்து பொந்துகளில் கூட சானு ஜான் வர்கீஸின் கேமரா மாயாஜாலம் காட்டியிருக்கிறது. ஹாலிவுட் படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் ஹெவி மெட்டல் இசையை இதில் பின்னணி இசையாக்கி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
கமல் உண்மையிலேயே போலீஸ் தானா? இல்லை அவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா? என்கிற குழப்பம் அவரது கேரக்டரை சரியாக காட்சிப்படுத்தவில்லையோ என்கிற கேள்வியை எழுப்புகிறது.
ஒரு நைட் கிளப், அங்கு இரவு முழுவதும் நடக்கிற சம்பவங்கள் என எந்த இடத்திலும் போரடிக்காமல் திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போனதில் கமல் வெற்றி பெறுகிறார்.
தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல.., பாபநாசம் படத்தின் வெற்றியிலிருந்து நடிப்பு ரீதியாகவும் கமலிடம் பல மாற்றங்களை வெளிப்படையாகக் காண முடிகிறது. வழக்கம் போல நடிகைகளின் உதட்டை பஞ்சர் ஆக்கும் பழக்க தோஷத்தை தவிர…! வில்லன் கோஷ்டி துரத்தும் போதெல்லாம் மதுஷாலினியை கட்டிப்பிடித்து அவரது உதட்டைக் கடிப்பது கமல் இன்னும் அந்த கெட்ட பழக்கத்தை விடவில்லை என்றே எண்ண வைக்கிறது.
கிளைமாக்ஸில் ”அம்மா அப்பாவுக்கு அடிபட்டிடுச்சு.. பார்க்க வாங்க” என்று மகன் ஆஷா சரத்தை கூப்பிடவும். ”சேர்த்தாச்சுல்ல.. அப்போ அவங்க பார்த்துப்பாங்க…” என்பார். அதற்கு மகன் ”அதாம்மா அப்பாவை பார்த்துக்க இங்க நெறைய பேர் இருக்காங்க, அதனால தான் உங்களை உடனே கிளம்பி வரச் சொன்னேன்” என்கிற இடத்தில் சுகாவின் வசனம் பளிச்.
இது பக்கா மாஸ் படம் என்று சொல்லி விட்டு கிளறிய குப்பையையே கிளறிக்கொடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே கொடுத்த காசுக்கு குறைவில்லாத த்ரில்லுடன், விறுவிறுப்பான படத்தை இயக்கித் தந்திருக்கிறார் கமலின் சிஷ்யர் ராஜேஷ் ம செல்வா.
அந்த வகையில் இந்த தூங்காவனம் நோ மோர் போர்….