உனக்கென்ன வேணும் சொல்லு – விமர்சனம்
‘டெய்சி’ என்று டைட்டில் வைத்திருந்த போது வராத எதிர்பார்ப்பு ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்று மாற்றவும் எகிறி விட்டது.
இருக்காதா பின்னே..? அஜித் நடிப்பில் ரிலீசான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வரும் ஹிட் பாடல் வரியாச்சே…?
ஒரு குழந்தை அம்மா அப்பா மூவருக்குமிடையே நடக்கும் பாசப் போராட்டம். உளவியல், மனவியல் கொஞ்சம் சயின்ஸ் என வாழ்க்கையை டீப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
முதல் படமே ஒரு கமர்ஷியல் தான் என்கிற நடைமுறையை தகர்த்து வாழ்க்கையை ரசித்து படமாக்கியிருக்கிறார்.
உங்கூடவும், அம்மா கூடவும் சேர்ந்து சந்தோஷமா வாழணும்ப்பா… என்கிற பாசத்துக்காக ஏங்குகிற ‘டெய்சி’ மொத்த தியேட்டரையும் கண் கலங்க வைத்து விடுகிறாள்!
சிங்கப்பூரில் வசிக்கும் ஜாக்லின் பிரகாஷ் – சிவா தம்பதியரின் செல்ல மகனுக்கு லட்சத்தில் ஒருவருக்கு வரும் விசித்திரமான நோய்.
டாக்டர் சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவரை சந்திக்க சொல்கிறார். ஜாக்லினோ அங்கு வேணாம், வேண்டுமானால் நியூயார்க் போகலாம் என்கிறாள்.
ஏன்? சென்னையில் ஏற்கனவே அவளுக்கு ஒரு காதல், குழந்தை என இன்னொரு வாழ்க்கை. அதை மீண்டும் இந்த சென்னைப்பயணம் நினைவூட்டும் என்பதால் தயக்கம்.
வேறு வழியில்லை சென்னைக்கே வருகிறார்கள்.
வந்த இடத்தில் ஜாக்லினையும், அவரது முன்னாள் காதலர் தீபக் பரமேஷையும் பழி வாங்கக் காத்திருக்கிறாள் எட்டு வயது ஆவியாக இருக்கும் அவர்களுக்கு பிறந்து இறந்த குழந்தை அனு.
ஏன் பழி வாங்க துடிக்கிறது என்பதை கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் உடன் முடித்திருக்கிறார்கள்.
வழக்கமான ஆவி, பேய் த்ரில்லர் வகையறா படங்களில் இருக்கும் திகில் சமாச்சாரங்கள் சொச்சம் இந்தப்படத்திலும் உண்டு. அதையும் தாண்டி குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் தாய். பெற்ற குழந்தையை வளர்க்க சங்கடப்படும் ஒரு தாய், அப்பா – மகள் பாசம் என ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பாசப்போராட்டத்தை மிக அழகாக மெல்லிய தாமரையில் மிதக்கும் நீர் போல சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
கார்த்திக்காக வருகிறார் தீபக் பரமேஷ். காதல் மனைவியை பிரிந்து வாழும் அவரை மோர்ணா அனீதா போனில் பேசியே கவர்வதும், அவர் மீதான மோகத்தில் அவருடைய வீட்டுக்குப் போகும் போது காத்திருக்கும் அதிர்ச்சியும் எதிர்பாராத திருப்பம்.
தேவையான இடத்தில் ரொமான்ஸ் தேவையான இடத்தில் பயம் என்று போகிற அவருடைய கேரக்டர் கிளைமாக்ஸில் ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறது.
பூஜாவாக வரும் ஜாக்லின் பிரகாஷ் அழகான திருத்திய முகம். அழகான அந்த முகத்தின் அழகை குறைக்கும் விதமாக அளவைக் கடந்த லிப்ஸ்டிக் பூச்சு ஏனோ? கணவருக்கு வேலை போனவுடன் தவிக்கிற தவிப்பும், பெற்றெடுத்த குழந்தையை தவிக்க விட்டு அது இறக்க நேர்கையில் குற்ற உணர்ச்சியில் குமுறித் தவிப்பதுமாக காட்சிகள் அபாரம்.
குழந்தை டெய்சியாக வரும் அனு வரும் காட்சிகள் கம்மி தான் என்றாலும் எல்லாக் காட்சிகளுமே மிரட்டலான காட்சிகள்.
ஆவியை விரட்டுபவராக வரும் மைம் கோபி ஒவ்வொரு முறையும் அவரே பயந்து ஓடும் காட்சிகள் பீதியைக் கிளப்பினாலும் கூடவே வருகிறது இதழோரம் லேசான புன்னகையும்!
தீபக் பரமேஷின் கள்ளக்காதலி ஜீடியாக வரும் மோர்ணா. அப்பப்பா அவர் வீடே பயங்கரம் தான். கட்டிய மனைவியின் கவலையை புரிந்து கொள்ளும் நல்ல கணவனாக வருகிறார் குணாலன் மோகன்.
த்ரில்லர் படமென்றாலே பின்னணி இசையும் ஒளிப்பதிவும் முக்கியம், அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவும், சிவசரவணனின் பேக்கிரவுண்ட் ஸ்கோரும்!
அமெரிக்காவில் சினிமாவை குறிப்பாக தொழில்நுட்ப விஷயங்களை பயின்றவர் என்பதால் சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக கவனத்தை செலுத்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
சீசனுக்கு வந்து போகிற ‘த்ரில்லர்’ படமென்கிற குறுகிய முடிவுக்கு வர வேண்டாம். நம்பி வாருங்கள், ‘டெய்சி’ உங்களை ஏமாற்ற மாட்டாள்.