நேர்மை வேண்டும்; அப்போது தான் நாடு ஒழுக்கமாக இருக்கும் : நீதிபதிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்

Get real time updates directly on you device, subscribe now.

vairamuthu

சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார். ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் , நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும் போது ”ஒரு நோயாளி மருத்துவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு மருத்துவர் நோயாளி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இருவருக்கும் பரஸ்பரமானது.

நாட்டில் நான்கு பேர் சரியாக இருக்க வேண்டும். நீதிபதிகள் , டாக்டர்கள் , காவல் துறைத் தலைவர்கள் , கல்வித்துறை தலைவர்கள் என்கிற இந்த நான்கு பேரும் சரியாக இருந்தால் நாட்டு ஒழுக்கம் சரியாக இருக்கும்.

அதோ போகிறாரே நீதிபதி அவர் நேர்மையானவர் , அந்த மருத்துவர் ஒழுக்கமானவர் , அந்த கல்வி போதிக்கும் ஆசிரியர் மிகவும் உயர்ந்தவர் என்கிற கருத்து இருக்கிற சமூகத்தில் ஒழுக்கத்தின் நிழல் படியும் .

இந்திய மருத்துவத்துறை பற்றி மதிக்கத்தக்க தகவல் என்னிடம் இல்லை. இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்.ஆனால் மேலை நாடுகளில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஆறுலட்சம் மருத்துவர்கள் தேவை . 200 மருத்துவக் கல்லூரிகள் தேவை. மருத்துவமனைகளில் ஏழு லட்சம் படுக்கைகள் தேவை. இந்தியத் தேவையை ஈடுகட்டும் வகையில் பழனியப்பன் தன் பங்காக இந்திய மருத்துவத் துறைக்கு இந்த மருத்துவமனையை அளித்துள்ளார்.

இம் மருத்துவ மனையின் திறப்பு விழாவில் நோயாளிகள் பெருகி அதிகம் வந்து வாழ்க என்று வாழ்த்தலாமா? முடியாது. இங்கே வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்திப் பேசினார்.