வலியவன் – விமர்சனம்
யாருக்கு எந்த ‘வலி’ வந்தா என்ன நம்ம ‘வழி’ சரியாப் போகுதா அதை மட்டும் பார்த்தாப் போதும் என்று இயக்குனர் சரவணன் கொஞ்சம் கூட சிந்திக்காமல் திரைக்கதை அமைத்து நம்மை ஒரு காரிலேயே முதல் பாதியை முடித்து இம்சிக்கும் படம் தான் இந்த ‘வலியவன்’.
சென்னையிலுள்ள மிகப்பெரிய மாலில் மேனேஜர் லெவலில் இருப்பவர் ஜெய்.
ஒருநாள் அண்ணாசாலையிலுள்ள ‘சப்வே’யில் போய்க்கொண்டிருக்கும் போது எண்ட்ரி ஆகும் ஹீரோயின் ஆண்ட்ரியா ஜெய்யிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு ‘கண்டிப்பா நீ என்னைத் தேடி வருவ’ என்று எஸ்கேப் ஆகிறார்.
என்னடா முன்னப்பின்ன தெரியாத, அதுவும் அழகான ஒரு பொண்ணு நம்மக்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்றாளே என்று முதலில் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளும் ஜெய் சில நொடிகளில் அதையே சீரியஸாக எடுத்துக் கொண்டு மால் வேலையை மறந்து விட்டு கால் வலிக்க தினமும் ‘சப்வே’யில் காத்திருக்கிறார்.
ஆண்ட்ரியாவும் வந்தபாடில்லை. ஜெய்யும் விடுவதாக இல்லை.
ஒரு டைமில் ஆண்ட்ரியாவே ஜெய்யைத் தேடி மாலுக்கு விடுகிறார்.
ஜெய் தன் காதலைச் சொல்ல, அதை ஏத்துக்கணும்னா ”அந்தா அந்த ஆளை நீ அடிக்கணும்” என்கிறார்.
ஆண்ட்ரியா கை காட்டும் ஆள் குத்துச்சண்டையில் பதக்கம் வாங்கிய ஒரு வீரன்.
யோசிக்காமல் ஓ.கே சொல்லும் ஜெய் அவனை அடிக்கக் கிளம்புகிறார்.
ஜெய் எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்த பாக்ஸரை அடிக்கணும்? ஆண்ட்ரியா ஏன் அப்படி ஒரு வேலையை ஜெய்யிடம் கொடுக்கிறார் போன்ற அறிவியல் வினாக்களுக்கு கிளைமாக்ஸில் மொக்கை டயலாக்கோடு பதில் சொல்லி படத்தை முடிக்கிறார் இயக்குனர்.
ஜெய் இந்தப்படத்தின் கதையை கேட்டுத்தான் நடித்தாரா? அல்லது சம்பளத்துக்காக கேட்காமல் கமிட் செய்தாரா? என்று தெரியவில்லை. சிக்ஸ்பேக் வைக்கிறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க…? அதுக்கு துளிகூட பலன் இல்லாமப் போயிடுச்சே ப்ரோ!
‘ஆண்ட்ரியா’வை யாரு இந்த ‘ஆண்டி’ என்று ரசிகர்கள் சொல்ல ஆரம்பிப்பதற்குள் மேனியை கொஞ்சம் மெறுகேற்றிக்கொள்வது நல்லது. முத்திப்போன முக அழகை மேக்கப், மாடர்ன் ட்ரெஸ்களைப் போட்டு ஒப்பேத்துகிறார்.
ஜெய் நண்பனாக வரும் பால சரவணன் காமெடிக்காக இறக்கி விடப்பட்டவர் என்று நினைத்தால் அவர் எதுக்காக வருகிறார் தேவையில்லாமல்? என்கிற கேள்வியைத் தான் எழுப்புகிறார்.
டி.இமானின் இசையில் ‘காதல் நல்லவனா இல்ல கெட்டவன’, ‘ஆஹா காதல்’ பாடல்கள் மட்டும் தேறுகிறது. என்னாச்சு இமான் அண்ணாச்சி?
முதல் படமான எங்கேயும் எப்போதும் ரிலீசான போது ஆஹா நமக்கு ஒரு நல்ல விஷயம் உள்ள ஆளு கெடைச்சுட்டார் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
எப்போது இவன் வேற மாதிரி என்ற படத்தை கொடுத்தாரோ அப்போதே சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயரில் பாதி போய் விட்டது. இந்தப் படத்தில் மீதியையும் விட்டு விட்டார் இயக்குனர் சரவணன்.
ஜெய் அந்த பாக்ஸரை அடிப்பதற்கான காரணத்தை ஒரு ப்ளாஸ்பேக்கில் சொல்லியிருப்பார் பாருங்கள்.
வெறும் ரெண்டு ரூபா சாஸ் மேட்டருக்கு 18 கோடி ரூபாய் செலவழிச்சு ஒரு படத்தை எடுக்கணுமா..? பாவம் தயாரிப்பாளர்!