வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

arya

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆர்யா, சந்தானம், இயக்குநர் எம்.ராஜேஷ் காம்போவில் அதே அக்மார்க் சரக்கு + காமெடி எண்டர்டெயினர் தான் இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’

இயக்குநர் எம்.ராஜேஷ் படமென்றாலே அதில் சரக்குக்கும் பஞ்சமிருக்காது. காமெடிக்கும் பஞ்சமிருக்காது. இந்தப்படமும் அந்த வகையறா தான்.

தனது ரெகுலர் ஃபார்முலாவிலிருந்து விலகி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் சொதப்பியதால், மீண்டும் டாஸ்மாக் பக்கமே திரும்பியிருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ். சும்மா சொல்லக்கூடாது, அவருக்கும் இந்த ‘மிக்ஸிங்’ தான் செட்டாகிறது.

மூளைக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லாத சிம்பிளான கதை?

டைட்டிலைப் போலவே வாசுவான சந்தானமும், சரவணனான ஆர்யாவும் சிறு வயதிலிருந்தே ஒண்ணா படிச்சு, ஒண்ணாவே குடிச்சு வளர்ந்தவங்க. எத்தனை நாளைக்குத்தான் சரக்குமயக்கத்துலேயே இருக்கிறது. பொறுப்பு வரணும்னா கல்யாணம் பண்ணனும்ல?

சந்தானத்துக்கு பானுவை பெண் பார்க்கிறார்கள்.

தன் உயிர் நண்பனின் வருங்கால மனைவியை இண்டர்வியூவ் செய்ய வரும் ஆர்யா வந்த இடத்தில் பானுவை பின்னால் வந்து பயமுறுத்துகிறார். ஆர்யாவின் முதல் அப்ரோச்சே பானுவுக்கு எரிச்சலை தருகிறது. பொறுத்துக் கொள்ள திருமணம் சுபமாக நடக்கிறது.

அடுத்தடுத்து நடப்பது தான் வேடிக்கை.

முதலிரவில் கட்டிலை உடைக்கச் செய்வதில் ஆரம்பிக்கும் ஆர்யாவின் ஒவ்வொரு சேட்டையும் பானுவுக்கு உச்சகட்ட கோபத்தை உண்டாக்க, ”அவனோட பிரெண்ஷிப்பை கட் பண்ணிட்டு வந்தா தான் நமக்குள்ள எல்லாம்” என்று முதலிரவுக்கு தடை போடுகிறார்.

நொந்து போகும் சந்தானம் ஆர்யாவுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து ஒரு திருமண தகவல் நிலையத்துக்கு ஆர்யாவை கூட்டிப் போகிறார். அங்கே வேலை செய்யும் தமன்னாவையே திருமணம் செய்ய தயாராகி அவர் பின்னாடியே சுற்றுகிறார் ஆர்யா.

முதலில் திமிரும் தமன்னா ஆர்யாவை விட சுமாரான பையனை வீட்டில் மாப்பிள்ளையாக்க முடிவெடுக்கவும் ஆர்யாவே பரவாயில்லை என்று காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.

Related Posts
1 of 3

முதல் பாதியில் பானுவிடம் ஆர்யா இன்டர்வியூவ் செய்தது போலவே இரண்டாம் பாதியில் தமன்னாவிடம் இண்டர்வியூவ் செய்கிறார் சந்தானம். முதல் பாதியில் வெடித்த பானு போலவே இரண்டாம் பாதியில் வெடிக்கும் தமன்னா ”முதல்ல சந்தானத்தோட பிரண்ஷிப்பை கட் பண்ணிட்டு வா” என்கிறார்.

சந்தானத்தின் ப்ரெண்ஷிப்புக்கு ஆர்யா குட்பை சொன்னாரா? சந்தானத்தின் முதலிரவு ஏக்கம் தீர்ந்ததா? என்பதையே உண்ணாவிரத பந்தல் போட்டு தீர்க்கிறார்கள்.

சந்தானம் இருக்க காமெடிக்கு ஏன் பஞ்சம்? ”ஏங்க ட்ரெயின்ல இருந்து தானே வந்தோம்? ஏதோ ட்ரெயினேஜில இருந்து வந்தா மாதிரி பேசுறீங்க..”. ”தலைவனுக்காக மொட்டை போடுறவன் தொண்டன், தொண்டனையே மொட்டை அடிக்கிறவன் தான் தலைவன்” மாதிரியான சந்தானத்தின் புதிதான காமெடிப் பஞ்சுகள் கலகலப்புக்கு கேரண்டி.

சரக்கடிக்கிற இடத்துல ஆயிரம் ‘சைட் டிஸ்’கள் இருந்தாலும், மனசு என்னவோ 50 பைசா ஊறுகாயைத் தானே தேடும்..! அப்படித்தான் சந்தானத்தின் பஞ்ச்களும்! அதனால் தான் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்.

ப்ரெண்ஷிப்புக்குள் எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் அடுத்த நொடியே அதை மறந்து விட்டு ”டேய் மச்சான்” ஆகிற ஆர்யா அடடே ஆர்யா!

ஹீரோ ஆர்யா என்றாலும் அவர் லெவலுக்கு சந்தானத்துக்கும் காட்சிகளை விட்டுக் கொடுத்திருப்பது ஆர்யாவின் பெருந்தன்மை. டூயட்டுகளை தவிர பாடல்கள், நடிப்பு, காட்சிகள் என எல்லாவற்றையும் இருவருக்குமே சரிசமமாக பகிர்ந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

பேர் அண்ட் லவ்லி போடாமலேயே சுண்டி இழுக்கும் கலரில் வரும் தமன்னாவை பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி காட்டாமல் அடக்கி வாசிக்க வைத்திருப்பது பெருத்த ஏமாற்றம்.

அதேபோல தமன்னாவின் தோழி வித்யூத் ராமன் தான் ஆர்யாவை அதிகம் நெருங்குகிறார். தமன்னா ஓரமாக நிற்க, வித்யூ ராமன் ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்கிறார்.. கொடுக்கிறார்… கொடுத்துக் கொண்டே இருக்கிறார்….

எடுக்கிற எல்லாப் படங்களிலும் பெருத்துப் போன ஷகிலாவுக்கு சின்ன இடமாவது கொடுக்க வேண்டும் என்பது வேண்டுதலா ராஜேஷ் சார். இதிலும் ஷகிலா வருகிறார். அவர் வந்து போனவுடன் விஷால் வருகிறார். ‘பாயும் புலி’ போல வருபவர் வந்த வேகத்தில் ஷகிலாவைத் தேடுவது செம கலாய்….

படம் முழுக்க ஆர்யாவும், சந்தானமும் குடிக்கிறதை காட்டின இயக்குநர் ஒரு சீனிலாவது ரெண்டு பேரும் படிக்கிறதை காட்டியிருக்கலாமே..?

நண்பர்களை வைத்து இப்படியெல்லாம் கதையை யோசித்து படமாக்க முடியுமா? என்று சகல ரசிகர்களும் குழம்புகிற அளவுக்கு திரைக்கதையை எழுதியிருந்தாலும் அதை தனது வழக்கமான ‘சைட்டிஸ்’களுடன்  டேஸ்ட்டியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.