பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த ரஜினி பட டைட்டில்!
ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா அடுத்து அதே நிறுவனம் தயாரிக்கும் ‘வீரா’ படத்திலும் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார்.
‘ஒரு நிறுவனத்துக்கு ஒரு நடிகர் மூன்று படங்களில் ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் நடிக்கிறார் என்பதில் இருவருக்கும் சம பெருமையும் அந்தஸ்தும் கூட. வெவ்வேறு கதைகள் , வெவ்வேறு இயக்குனர்கள் என்றாலும் அதே நடிகர் என்பதில் ரொம்பவும் சௌகரியம் தான். அவரது இந்த தொழில் நேர்மைக்கு நாங்கள் கொடுக்கும் பரிசுதான் ‘வீரா’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பு.
ரஜினி சாரின் இந்த தலைப்பை விட அவருக்கு நாங்கள் சிறந்ததாக என்ன கொடுத்து விட போகிறோம். இது திட்டமிடப்பட்டது என்பதை விட அமைந்தது என சொல்லலாம்.
நகைச்சுவையுடன் ஆக்ஷன் கலந்த இந்த ஜனரஞ்சகமான கதைக்கு பிரபல எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் இயற்றுகிறார். வீரா படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் புதிய இயக்குனர் கே.ராஜாராமன். ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தது வரும் கதாநாயகன் பாபி சிம்ஹாவுக்கு ‘வீரா’ மேலும் ஒரு மணி மகுடம் ஆகும்.
எனது நிறுவனம் சார்பாக பல்வேறு திறமையான புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.