நாங்களும் ரெளடி தான்… – சமகால அரசியலை துணிச்சலாகப் பேசும் ‘வீரா’!
‘யாமிருக்க பயமேன்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியை வைத்து ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘வீரா.’
கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா, தம்பி ராமையா,மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு, ராதாரவி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை பாக்கியம் ஷங்கர் எழுதியிருக்கிறார். ராஜாராமன் இயக்கியிருக்கிறார்.
இவர் ‘யாமிருக்க பயமேன்’ இயக்குநர் டி.கேவின் இணை இயக்குநராக பணியாற்றியவர். அதனாலோ என்னவோ தனது முதல் அறிமுகப்படத்தில் அதே வெற்றிக் கூட்டணியோடு களமிறங்கியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன்-காமெடி படமாக தயாராகியிருக்கும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பிண்ணனி இசையை எஸ்.என்.பிரசாத் அமைத்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ராஜாராமனிடம் கேட்டபோது, ”இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. கேங்க்ஸ்டர் கதையாக இருந்தாலும் படத்தை ஆக்ஷன் கலந்த காமெடிப்படமாக எடுத்திருக்கிறோம்.
‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு வரும் ஒரு தத்ரூபமான கேங்க்ஸ்டர் படமாகவும், சமகால அரசியலைப் பேசும் படமாகவும் இந்தப்படம் இருக்கும். படத்தில் காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே படத்தில் வருகிற கேரக்டர்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகளை ‘கட்’ செய்ய வேண்டாம் என்று சொல்லி சென்சாரில் படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிறோம்” என்றார்.
‘வீரா’ என்றதும் ரஜினி படம் தான் ஞாபகத்துக்கு வரும், அந்தப் பட டைட்டில் இந்தக் கதைக்கு எப்படி தேவைப்பட்டது? என்று கேட்டால் ”இந்தக் கதையில ஹீரோவோட பெயர் வீரமுத்து. அதனால முதல்ல படத்துக்கு ‘முத்து வீரா’ன்னு டைட்டில் வைக்கலாம்னு நெனைச்சோம். அப்புறம் ரஜினி சாரோட ‘வீரா’ டைட்டில் ரொம்ப பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி பஞ்சு சுப்பு சார்கிட்ட முறையான அனுமதி வாங்கி அந்த டைட்டிலை வெச்சோம். ரஜினி சார் படத்தோட டைட்டிலா வெச்சது ரசிகர்கள் மத்தியில படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு” என்றார்.
மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்து பாடல்களுமே ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. படத்தில் வருகிற கேரக்டர்களும் ஏனோ தானோவென்று வந்து போகாமல் ஒவ்வொருவருடைய கேரக்டரிலும் நகைச்சுவையுடன் கூடிய நெகட்டீவ் ஷேடு இருக்கும். இவர் தான் வில்லன் என்று தனியாக யாரும் இல்லை. ஆனால் வருகிற எல்லோருமே வில்லனாகத் தெரிவார்கள் போன்றவை வீராவில் ஒளிந்திருக்கும் எக்ஸ்ட்ரா ஆச்சரியங்கள்!
சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்ட’ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ ‘வீரா’ படத்தை வெளியிடுகிறது.
பிப்ரவரி 16-ம் தேதி இந்த வாரம் ரிலீசாகவிருக்கும் ‘வீரா’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 250 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 45 தியேட்டர்கள், கேரளாவில் 35 தியேட்டர்களில் ரிலீசாகிறது.