விடுதலை2- விமர்சனம்
வெற்றிமாறன் ஏற்றியுள்ள செங்கொடியே இந்த விடுதலை 2
விஜய்சேதுபதி தன்னை அழைத்துச் செல்லும் காவலர்களிடம் தன் கதையைச் சொல்வது தான் படத்தின் கதை. சென்ற பாகத்தில் ரயில் விபத்தில் துவங்கி, அதற்கு காரணமான விஜய்சேதுபதியை கைது செய்ததோடு படம் முடிந்திருந்தது. இந்தப்பாகத்தில் விஜய்சேதுபதியின் பின்னணியை, பலமான உரையாடல்களோடு நிகழ்த்துவதாக படம் பயணிக்கிறது. மேலும் ரயில் விபத்தின் உண்மையான பின்னணி என்ன எனபதற்கான விளக்கமும் நமக்கு கிடைக்கிறது
விஜய்சேதுபதி வாத்தியராக இதில் வாழ்ந்திருக்கிறார். பெரும்பான்மையான ஸ்கிரீனை அவர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளார். அது பெரிதாக உறுத்தாத அளவில் அமைந்துள்ளது சிறப்பு. மஞ்சுவாரியார் தன் முடிக்குச் சொல்லும் பின்கதை வலிமையான ஒன்று. விஜய்சேதுபதி மஞ்சுவாரியார் காதல் எபிசோட்ஸ் ஓரளவு தான் தாக்கத்தைக் ஏற்படுத்துகிறது. சூரிக்கு இந்தப் பாகத்தில் பெரிதாக வேலை இல்லை. சேத்தன் அடிதூள் பண்ணியிருக்கிறார். கெளதமெனென், பாலாஜி சக்திவேல் உள்பட படத்தில் நிறைய கேரக்டர்ஸ் இருக்கிறார்கள். யாருமே சோடை போகவில்லை. ராஜிவ்மேனென் செம்ம
இளையராஜாவின் பின்னணி இசை ஏமாற்றவுமில்லை; ஏற்புடையதாகவுமில்லை. வேல்ராஜ் தன் டீமோடு கடும் உழைப்பைப் போட்டுள்ளார். அதன்பலன் விஷுவலில் தெரிகிறது.
உழைக்கும் வர்க்கத்திற்குத் துணையாக நின்ற கம்யூனிச தோழர்களை படம் தூக்கி வைத்துக் கொண்டாடியுள்ளது. திரைக்கதை நான்லீனியர் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னதான் படமெங்கும் சிஸ்டத்தின் குறைபாடுகளும், எளியவர்களின் வலிகளும் பேசப்பட்டாலும், அவை எதுவுமே கமர்சியல் மீட்டரில் இல்லை. ஆகையால் இந்த விடுதலை2 கருத்தியலாக ஜெயித்து,கமர்சியலாகச் சறுக்கியுள்ளது
3/5