சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் பட விழா!
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகை வடிவுக்கரசி பேசியதாவது…
இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள் நன்றி.