விஜய் 60 டைட்டில் ‘பைரவா’ : அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய் #Bairavaa

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ”விஜய் 60” படத்தின் டைட்டில் ”எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்க, எதற்கு தேவையில்லாத பஞ்சாயத்து என்று யோசித்த தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் ”விஜய் 60 பட டைட்டில் அது இல்லை. நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை கொஞ்சம் பொருத்தருள்க” என்று அறிவிப்பு வெளியிட வேண்டியதாயிற்று.
இந்நிலையில் தான் இரண்டு தினங்களுக்கு முன்பு ”விஜய் 60” பட டைட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று செய்தி வெளியானது.
”எங்கள் வீட்டுப் பிள்ளை” இல்லை என்று தயாரிப்பு நிறுவனமே அறிவித்து விட்ட நிலையில் திடீரென்று அஜித் நடித்த ”வீரம்” திரைப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயரான ”விநாயகம்” தான் ”விஜய் 60” பட டைட்டிலாக இருக்கக்கூடும் என்று அடுத்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால் நேற்று மதியம் வாக்கில் விஜய் ரிக்ஷாவின் கம்பீரமாக நிற்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. அதில் ”பைரவா” என்று டைட்டில் இருக்கவும் இது விஜய் 60 படத்தின் டைட்டில் தானா? என்று விஜய் ரசிகர்களிடையே பயங்கர குழப்பம்.
அந்த குழப்பம் தொடராமல் இருக்க நேற்று மாலையே விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பைரவா” தான் விஜய் 60 படத்தின் டைட்டில் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டார்.
டைட்டில் வெளியான நேற்றைய தினம் முதல் பைரவா டைட்டில் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் நின்று சாதனை படைத்து வருகிறது.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படம் வருகிற 2017 ஜனவரி பொங்கலுக்கு ரிலீசாகுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.