‘பைரவா’ டைட்டில்! : சோஷியல் மீடியாவை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! #Bairavaa

நேற்று முதல் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களை விடாமல் தெறிக்க விட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு டைட்டிலை கசிய விட்டு பரபரப்பை கிளப்பினார்கள்.
ஆனால் எதுவுமே உண்மையானது இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ”விஜய் 60” படத்தின் அதிகாரப்பூர்வமான டைட்டில் செப்டம்பர் 5ம் தேதியான இன்று விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த பரபரப்புக்கு விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்க நேற்று மதியமே ”பைரவா” என்கிற டைட்டிலோடு விஜய்யின் புதுப்பட போஸ்டர் ஒன்று சமூகவலைத் தளங்களில் பரவ ஆரம்பித்தது.

அது இன்று வெளியிடப்பட இருந்த ”விஜய் 60” டைட்டில் தான் என்று தெரிந்த நிலையில் நேற்று மாலை நடிகர் விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பைரவா” டைட்டிலை உறுதி செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான ”பைரவா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் விஜய் ரசிகர்களுக்கு உச்சகட்ட சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது. விஜய்யின் புத்தம் புதிய ஸ்டைலான லுக் குறித்து விஜய் ரசிகர்கள் பெருமிதத்தோடு கருத்துகளை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தனர்.
அதோடு விடவில்லை நேற்று வெளியான பைரவா பெயரை டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் விடாமல் #Bairavaa #BairavaaFirstLook என ஹேஷ்டேக்குகளைப் போட்டு ட்ரெண்ட்டிங்கில் நிற்க வைத்து கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் தியேட்டரில் ”பைரவா” பர்ஸ் லுக் போஸ்டரின் ரிலீஸையே ஒரு விழா போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதையும் சமூகவலைத் தளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
எதிர்பார்த்தபடியே வருகிற 2017 ஜனவரி மாதம் பொங்கலுக்கு ”பைரவா” ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.