தண்டனை ரொம்பக் கொடூரமா இருக்கணும்! : பாவனா விவாகரத்தில் விஷால் ஆத்திரம்
பிரபல நடிகை பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் அண்டை மாநிலமான கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த நடிகர் சங்கச் செயலாளர் விஷால் ”நேற்று கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே, நிஜமாகவே நடிகை பாவனாவின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இதை பற்றி வெளியில் சொல்ல அனைவரும் கூச்சப்படும் ஒரு சமயத்தில் நடிகை பாவனா அவருக்கு நடந்த சம்பவத்தை வெளியில் வந்து சொல்லியிருக்கிறார். அவருடைய தைரியத்தை நான் வணங்குகிறேன்.
இது போல் ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள். நாங்கள் ஏற்கனவே ஒரு கடிதத்தை நடிகர் சங்கம் சார்பில் கேரள முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். இன்று மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சார் கையெழுத்தோடு இன்று அனுப்பவுள்ளோம்.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை மிக கொடூரமாக இருக்க வேண்டும், அப்போது தான் இனி அந்த ஒரு விஷயத்தில் இறங்க பயப்படுவார்கள், யோசிப்பார்கள். நாங்கள் கேரள நடிகர் சங்கமான ”அம்மா”வை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த விஷயத்தில் எங்களுடைய முழு
ஆதரவையும் தெரிவித்துள்ளோம். இந்த விஷயத்தை பொறுத்தவரை உடனடியாக விரைந்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
இதை போல் ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது, என்னுடைய இதயம் வலிக்கிறது. நாங்கள் அனைவரும் இச்சமயத்தில் நடிகை பாவனாவுக்கு துணையாக இருக்கிறோம். இந்த செயலை செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்
கேரள முதல் அமைச்சருக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
நேற்று எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து குப்பை தொட்டியில் தூக்கி போட்டுள்ளார்கள் என்ற செய்தி வந்தது. பாலியல் பலாத்காரம், மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகளை தடுப்பதற்கு நிச்சயம் ஏதாவது கடுமையான தண்டனை சட்டம் வர வேண்டும்.
நாங்கள் இப்போது இதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்களும் முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் மிகவும் கொடூரமானது” என்றார் நடிகர் விஷால்.