கர்ணன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பொடியன் குளத்தை பொடியன்கள் வாழும் ஊராக கூட மதிக்காத மேலூர்க்காரர்கள் பொடியன்குளத்தில் பேருந்து நிற்பதை தடுக்கிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால் ஒடுக்குகிறார்கள். சாதியபடிநிலையை காரணங்காட்டியே பொடியன்குளத்தை அடிமை ஊராக கருதுகிறது அதிகார வர்க்கம். அந்த அதிகாரத்தை எதிர்த்து வீரவாள் ஏந்துகிறான் பொடியன்குளத்தைச் சேர்ந்த கர்ணன். கர்ணனின் வாள் முன்பு அதிகாரம் எப்படி மண்டியிட்டது என்பதே கர்ணனின் கதை

பாரத கர்ணன் கொடுப்பவன் என்றால் மாரிசெல்வராஜின் கர்ணன் உரிமையை உரத்த குரலில் கேட்பவன். கர்ணனாக மாறியிருக்கும் தனுஷுக்கு அடுத்த வருடமும் விருது வருடமாக இருக்கலாம். அத்தோடு நிற்காமல் கர்ணனில் இன்னொரு நடிகரும் விருதுபெற வாய்ப்பிருக்கிறது. அவர் லால். மனிதர் தனுஷின் நிழலாக வந்து மிரட்டி எடுத்துள்ளார். நாயகி, யோகிபாபு, நட்டி, பூ ராமு என திரையில் தெரிந்த முகங்கள் எல்லாம் திருநெல்வேலி சாயலோடு வந்து தடம் பதித்துச் செல்கிறார்கள்.

Related Posts
1 of 5

படத்தின் சிற்சில ஸ்லோ ஏரியாக்களை ஸ்ட்ராங்காக நகர்த்துகிறது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் நெல்லை அழகும், அழுக்கும், ரத்தமும் சதையும் அப்படியே பிரதிபலித்துள்ளது. வசனங்களில் நெல்லையின் மண்மணம் கமகமக்கிறது. அதிகாரத்திற்கு எதிரான வீரமொழிகளில் மாரிசெல்வராஜ் என்ற ரைட்டரின் கோபம் தெறிக்கிறது.

அடக்குமுறையை அதிகாரத்தால் எதிர்கொண்டால் தான் முடிவு கிடைக்கும் என்பதையும், அப்படி அதிகாரத்தை நாம் கையில் எடுக்கும் போது என்னென்ன விளைவுகள் நமக்கு நேரும் என்பதை நேர்மையாக பதிவுசெய்துள்ளார் மாரி.நேற்றைய தலைமுறை கடந்த வந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறை உணர்ந்தால் மட்டும் தான் மானுட நேசம் சாத்தியம் என்ற கருத்திற்கு வலு சேர்த்திருக்கிறான் கர்ணன். வாருங்கள் கர்ணனோடு கை கோர்ப்போம்
4/5