ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் யாரை நம்பி போட்டியிடுகிறார் விஷால்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள்

வதந்தியா அல்லது உண்மையா என்று செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் குழம்பிப் போயிருக்க, நேற்று மாலை ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து விட்டார் நடிகர் விஷால்.
ரஜினி இன்னும் போர் வரவில்லை என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்க, கமலோ மெதுவாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, இருவரையும் முந்திக்கொண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குதித்திருக்கும் விஷாலின் துணிச்சலை பாராட்டதவர்களோ, வியக்காதவர்களோ இல்லை.
நாளை டிசம்பர் 4-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்யப் போகிறார் விஷால். நடிகர் சங்கத் தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றதால் வந்த தைரியம் தான் அவரை அரசியல் தேர்தலிலும் குதிக்க வைக்கும் துணிச்சலைக் கொடுத்ததோ என்று பலருக்கும் சந்தேகம் வந்திருக்கிறது.
ஆர்.கே நகர் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் நாயுடு, ரெட்டி இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் தான் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த ரூட்டிலேயே விஷால் தனது அரசியல் பயணத்தை தன் மொழி பேசுகிற மக்கள் அதிகம் இருக்கிற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக அரசியலில் தனக்கு இருக்கும் ஆதரவு எப்படியிருக்கும்? என்பதை ஆழம் பார்க்கவும் இந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தனக்கு உதவும் என்பதால் தான் நேற்று திடீரென்று அரசியல் களத்தில் குதிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாராம் விஷால்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை போல அரசியலிலும் விஷால் போடுகிற கணக்கு அவருக்கு வெற்றியைத் தருமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.