கடுகு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Kadugu-Review1

RATING 3.5/5

காரில் போகிறவனோ, கரைவேட்டிக்காரனோ செய்வது அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை தட்டிக் கேட்க கடுகளவு மனசு இருந்தால் போதும் நியாயம் நிச்சயம் என்கிற சமூக கருத்தோடு ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘கடுகு’.

புலி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் ராஜகுமாரனை சமைத்துப் போடுவதற்காக தன்னோடு கூட்டிச் செல்கிறார்  தரங்கம்பாடிக்கு மாற்றலாகிச் செல்லும் போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷ்.

அங்கு ஊரில் பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்கும் பரத் தனக்கு வேண்டப்பட்ட மந்திரி வெங்கட் தன் வீட்டில் தங்க வருகிறார் என்பதற்காக தடபுடலாக ஏற்பாடுகளை செய்கிறார்.

ஊருக்குள் வந்த மந்திரியோ சபல புத்தியால் அங்குள்ள பள்ளிச் சிறுமி ஒருத்தியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்த அதிர்ச்சியில் இறந்து விடுகிறார் சிறுமி.

சிறுமியின் தற்கொலைக்கு காரணம் மந்திரி வெங்கட்டும், பரத்தும் தான் என்கிற உண்மை தெரிய வர இருவருக்கும் எப்படி தன் பாணியில் பாடம் கற்பிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

பாக்ஸர் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவராக பிட்டாகியிருக்கிறார்  பரத். எந்த ஒரு ஹீரோவும் இப்படியொரு நெகட்டீவ் கேரக்டரை ஏற்று நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் கதையே ஹீரோ என்பதை உணர்ந்தவராக ஒப்புக் கொண்ட பரத்துக்கு கடலளவு மனசு! இந்தா பிடியுங்கள் அதே அளவுக்கு பாராட்டுகளையும்!

புலி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் எளிய மனிதராகவும், மனித நேயம் மிக்கவராகவும் வருகிறார் டைரக்டர் ராஜகுமாரன். படத்தில் தோன்ற ஆரம்பித்த காட்சியிலிருந்து முடியும் வரை மகிழ்ச்சி, சோகம், சந்தோஷம், கோபம், இயலாமை என எல்லாவித உணர்ச்சிகளையும் தன் கேரக்டரில் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அவர் நின்று நிதானமாகப் பேசும் ஒவ்வொரு வசனங்களும் நச் நச். இயக்குநராக ஜெயிக்க முடியாத ராஜகுமாரன் இனி நடிகராக கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்பது நிஜம்.

ராஜகுமாரன் ஜோடி ராதிகா பிரசித்தா தன் ப்ளாஷ்பேக் கதையை சொல்கிற போது பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.

பரத் ஜோடியாக வரும் சுபிக்‌ஷா படம் முழுக்க அங்கேயும், இங்கேயுமாக ஊரை அளக்கிறார். அழகாகவும் இருக்கிறார். அதைத்தாண்டி அவரிடம் பாராட்ட ஒன்றுமில்லை.

சுபிக்‌ஷாவை ஒருதலையாக காதலிக்கும் பரத் சீனி தமிழ்சினிமாவுக்கு நல் வரவு. வசன உச்சரிப்பு, உடல்மொழி இரண்டுமே சிறப்பு.

படத்தில் மந்திரியைத் தவிர மீதி எல்லாக் கேரக்டர்களையும் நல்லவராகவும், நியாயத்தின் பக்கம் நிற்பவர்களாகவும் காட்டியிருக்கிறார் டைரக்டர் விஜய் மில்டன்.

ஒளிப்பதிவாளரும் அவரே என்பதால் சின்னச் சின்ன சீன்களில் கூட பொலிவைக் கூட்டியிருக்கிறார்.

அருணகிரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் இதமோ இதம்.

 டூவிலருக்கு அபராதம் கட்ட முடியாமல் அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே மூன்று வருடங்களாக பரத் சீனி டேரா போட்டுக்கொண்டிருப்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. லட்சம் ரூபாய் அபராதமா என்ன?  படத்தில் அவர் உட்பட சில கேரக்டர்கள் பேசுகிற வசனங்களில் ஒலி அளவை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம். அல்லது நிதானமாகப் பேசியிருக்கலாம்.

கடுகு சைஸ் பலமிருந்தாலும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க துணிச்சல் இருந்தால் போதும் என்கிற கருத்தை ஒரு பணக்கார இளைஞன், ஒரு எளிய மனிதன் இருவரின் பின்னணியோடு சாட்டையடி வசனங்களை கோர்த்து நல்ல சமூகப் படமாகத் தந்திருக்கிறார் விஜய் மில்டன்.

கடுகு – வீரியம் ஜாஸ்தி!