விசிறி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2/5

நடித்தவர்கள் – ராம் சரவணன், ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெபனி மற்றும் பலர்

இசை – தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய் பரத், நவீன் சங்கர்

ஒளிப்பதிவு – விஜய் கிரண்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

வகை – காமெடி, நாடகம்

80, 90களின் ரஜினி – கமல் ரசிகர்கள் படங்கள் ரிலீசாகும் போது தியேட்டர்களில் நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள். தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் – அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்கிறார்கள். அவர்களின் அந்த வலைத்தள மோதலோடு, கொஞ்சம் காதலும் கலந்து வந்திருக்கும் படம் தான் இந்த ‘விசிறி.’

சென்னையில் வசிக்கும் அஜித் ரசிகரான ராமும், மதுரையில் இருக்கும் விஜய் ரசிகரான ராஜ் சூர்யாவும் விஜய் தான் மாஸ், அஜித் தான் மாஸ் என்று தங்களுக்குள் அடிக்கடி ஃபேஸ்புக்கில் சண்டை போடுகிறார்கள்.

Related Posts
1 of 43

இதற்கிடையே ராஜ் சூர்யாவின் தங்கையான நாயகி ரெமோனா ஸ்டெபனி படிப்புக்காக சென்னை வருகிறார். விஜய் ரசிகையான அவரை பார்த்ததும் காதலில் விழும் ராம் தன்னை விஜய் ரசிகராக பொய் சொல்லி காதலிக்கிறார்.

தன் காதலுக்கு அண்ணனிடம் சம்மதம் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ராமும், ராஜ் சூர்யாவும் சென்னையில் பொது இடத்தில் சண்டை போடுகிறார்கள். அதன்பிறகு தான் ராம் விஜய் ரசிகர் அல்ல, அஜித் ரசிகர் என்கிற உண்மை தெரிய வருகிறது. இதனால் கோபப்பட்டு ராம் உடனாக காதலை துண்டித்துக் கொண்டு அண்ணனுடன் மதுரைக்கே சென்று விடுகிறார் ரெமோனா ஸ்டெபனி.

அங்கு சென்றவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதற்குக் காரணம்? தனது காதலன் ராம் தான் என்று நினைக்கிறார்? அந்த சிக்கல் என்ன? அதிலிருந்து நாயகி எப்படி வெளியே வந்தார்? காதலனும், காதலியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

அஜித் ரசிகராக வரும் ராம் சரவணா, விஜய் ரசிகராக வரும் ராஜ் சூர்யா இருவரும் புதுமுகங்கள் என்றாலும், தல, தளபதி ரசிகர்களாக தங்கள் பங்கை வெறியோடு செய்திருக்கிறார்கள்.

புதுமுக நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்ப்பதற்கு சாதாரண நாயகி போல இருக்கிறார். கண்களைக் கூசும் உதட்டில் லிப்ஸ்டிக் அளவைக் குறைத்திருக்கலாம்.

தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் மூவரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், விஜய் கிரணின் ஒளிப்பதிவும் ஓஹோ அளவுக்கு இல்லை என்றாலும் மோசமில்லை.

அஜித் பற்றி விஜய் கலாய்ப்பதும், விஜய் பற்றி அஜித் கலாய்ப்பதுமான காட்சிகள் இருந்தாலும் அதை இரண்டு பேரின் ரசிகர்கள் மனதும் புண்படாதவாறு அமைத்திருக்கிறார்  இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.

வெறும் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களின் மோதலாக மட்டும் காட்சிகளாக வைக்காமல், பெண்களை பாதிக்கும் சமூகவலைத்தள  பிரச்சனையையும் திரைக்கதையில் இணைத்து படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.