விட்னஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இன்றைய சமூகத்தின் போலி அரசியலையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அவலத்தையும் நேரடி ஆதாரத்தோடு பேசியிருக்கிறது விட்னஸ்

செம்மஞ்சேரியில் வசிக்கும் ரோஹினி தூய்மைப்பணியாளர். அவரது மகனை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது அவர் கனவு. ஒரு அப்பார்ட்மெண்டில் ரோஹினியின் மகன் மலக்குழிக்குள் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுகிறார். அதில் ஓர் விபரீதம் நிகழ்கிறது. அதற்கான நியாயம் தேடி பயணிக்கிறார் ரோஹினி. அந்தப்பயணத்தில் அவர் அடைந்த ஆறுதல் என்ன? என்பதே படத்தின் கதை

ரோஹினி வழக்கம் போல் தன் எதார்த்த நடிப்பால் மனதை கலங்கடிக்கிறார். விட்னஸில் அவர் உடையும் காட்சிகள் எல்லாமே தரம். ஷரத்தா ஸ்ரீநாத் பதட்டமும் கோபமும் நிறைந்தவராக நடித்துள்ளார். அந்தக்கேரக்டருக்கு போதுமான நியாயம் சேர்த்துள்ளார். ரோஹினியின் மகன் கேரக்டர் உள்பட யாவருமே நல்ல நடிப்பு தான்.

பின்னணி இசையில் நல்ல அதிர்வு வெளிப்பட்டுள்ளது. செம்மஞ்சேரியின் சந்துபொந்துகளில் எல்லாம் தீபக்கின் கேமரா சுற்றி வந்துள்ளது. படத்தின் இயக்குநரும் இவர் தான். அதனால் தான் அவர் எழுதிய எல்லாமும் காட்சிகளாக வந்துள்ளது. ஆர்ட் டிப்பார்மெண்ட் வொர்க் ஓகே ரகம். சில இடங்களில் பட்ஜெட் குறைபாடு தெரிகிறது

மிகவும் ஆழமான கதையை நீளமாக நீட்டி முழக்காமல் சரியான அளவோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர். முன்பாதி படத்தில் நமக்குள் ஏற்பட்ட தாக்கம் பின்பாதியில் சற்று இறங்கி விடுகிறது. அதற்கான காரணம் படம் தன் இலக்கை விட்டு சற்று அலைபாய்வது தான். இன்னும் ஷார்ப்போடு ஆராய்ந்திருந்தால் விட்னஸ் அழிக்கவே முடியாத ஆதாரமாக இருந்திருக்கும். ஆயினும் அதிகாரத்திற்கு எதிராக செங்கொடி ஏந்தும் இப்படியான படங்கள் அவசியம் வரவேண்டும்

3/5

#Witness #விட்னஸ்