54321 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

54321-review1

RATING : 2.2/5

5 மனிதர்கள், 4 வாழ்க்கை முறைகள், 3 கொலைகள், 2 மணிநேரம், 1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதையாக்கி “54321” என்கிற வித்தியாசமான டைட்டிலோடு கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ஏ.ராகவேந்திர பிரசாத்தின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் இந்த ”54321”.
சிறு வயதிலிருந்தே பக்கத்து வீட்டுப் பையனான அர்வின் உடன் தன்னை ஒப்பிட விரும்பாத ஷபீர் மெல்ல மெல்ல கோபத்தின் உச்சிக்கே சென்று அர்வினின் அம்மாவை கொலை செய்கிற அளவுக்கு துணிகிறான்.

அதை தட்டிக் கேட்கும் தனது அம்மாவையும் கத்தியால் குத்தி கொலை செய்ய விளைவு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான்.

பின்னர் வளர்ந்து இளைஞன் ஆன பிறகும் அந்த சிறுவயது வன்மத்தை விடாமல் அர்வினை பழிவாங்க வருகிறான்.

அவன் எண்ணம் நிறைவேறியதா? அர்வினும் அவனது மனைவி மற்றும் குழந்தையும் அவனிமிருந்து தப்பித்தார்களா என்பதே கிளைமாக்ஸ்.

கோட்-சூட் போட்டு தனி ஒருவன் அரவிந்த் சாமி லுக்கில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் சபீர்.

தன் மகள் என்று தெரியாத போதும் ஒரு குழந்தையை கொலை செய்யச் சொல்கிறானே? என்கிற கோபத்தில் தனது மனைவியையும் காப்பாற்ற முடியாமல், குழந்தையையும் கொலை செய்ய மனசில்லாமல் தவிக்கிற போது அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்வின்.

ஒருசில காட்சிகள் தவிர்த்து முழுப்படத்திலும் வாயில் ப்ளாஸ்திரி ஒட்டப்பட்டு, கைகள் இரண்டு கட்டப்பட்ட நிலையிலும் முகபாவங்களாலேயே நடிப்பில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார் நாயகி பவித்ரா.

Related Posts
1 of 43

கண்டிப்பான அப்பாவாக வரும் ரவி ராகவேந்தர் எதற்கெடுத்தால் பக்கத்து வீட்டுப் பையனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அப்பாக்களின் கேரக்டரை முழுமையாக பிரதிபலிக்கிறார்.

அந்த வீட்டுக்குள் கொள்ளையடிக்க வந்து வில்லனிடம் தானாக மாட்டிக்கொள்ளும் கொள்ளைக்கார மனுஷனான ஜெயக்குமாரின் பதட்டம் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு சமயத்தில் தப்பிக்க இடைவெளி கிடைத்தும் தான் கொள்ளையடித்த பணத்தை மறந்து வைத்து விட்டு வெளியே போக மனசில்லாமல் மீண்டும் வில்லன் இருக்கும் அறையிலேயே வந்து ஒளிந்து கொள்வது விறுவிறுப்பான காமெடி.

ஒரே ஒரு அறைக்கும் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும் குழந்தையை கொல்வதற்காக ஒவ்வொரு முறையும் கவுண்ட்டவுன் கொடுத்து ரசிகர்களை சீட்டு நுனிக்கு வர வைப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

அதே நேரம் சபீரிடம் சிக்கிக் கொள்ளும் நால்வருக்கும் தப்பித்துப் போக சில வழிமுறைகள் அப்பட்டமாகத் தெரிந்தாலும் இயக்குநர் அதையெல்லாம் விட்டு விட்டு காட்சிகளை நகர்த்த நினைத்திருப்பது கொஞ்சம் கோழைத்தனம்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் மெலோடி மெல்லிசை. பின்னணி இசை விறுவிறுப்புக்கு கியாரண்டி.

குழந்தைகளின் உலகத்தின் ஒரு பகுதியான ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனை பக்கத்து வீட்டுப் பையனோடு ஒப்பிடுவதால் ஏற்படும் உளவியல் சிக்கலை திரைக்கதையாக்கி ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

54321 – ‘திக்’ ‘திக்’ கவுண்டவுன்!