மீன் குழம்பும் மண் பானையும் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

mkmp-review1

RATING : 3/5

மீன் குழம்பாக இருக்கிற மகனும், மண்பானையாக இருக்கிற அப்பாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக மகன் மண்பானையுமாக, அப்பா மீனாகவும் மாறி வாழ்க்கையை படிப்பதே இந்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விட்டு பிரசவத்தில் மனைவி இறந்து போனதும் கைக்குழந்தையாக இருக்கும் ஹீரோ காளிதாஸூடன் மலேசியாவுக்கு ப்ளைட் ஏறுகிறார் காரைக்குடி செட்டியாரான பிரபு. மலேசியாவில் ரோட்டுக்கடை ஆரம்பித்து மெல்ல மெல்ல வளர்ந்து மீன்குழம்பும் மண்பானையும் என்கிற தென்னிந்திய அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.

வளர்ந்து இளைஞர் ஆகும் அவரது மகன் காளிதாஸ் எப்போதுமே தான் தன் நண்பர்கள் என்று சந்தோஷமாக வாழ ஆசைப்பட, அவரது ஆசைக்கு அளவுக்கு மீறி அன்பு செலுத்தும் அப்பாவின் நெருக்கம் பெரிய இம்சையாகத் தெரிகிறது.

அந்த பாசத்தை ”ஏம்ம்ப்பா இப்படி பாசம் காட்ற மாதிரி நடிக்கிறீங்க…?” என்று சொல்லி மனசைக் காயப்படுத்த, பேசாமல் இருக்கும் இருவரையும் தான் இருக்கும் ஒரு தீவுக்கு வரச்சொல்லி சாமியார் கமல்ஹாசனிடம் பேசச் சொல்கிறார் பிரபுவின் நண்பர் ஒய்.ஜி மகேந்திரன்.

அப்பா – மகன் இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசும் கமல் ஒருவருடைய ஆன்மாவை இன்னொருவருக்கு கடத்தி விடுகிறார். அதாவது அப்பாவுக்கு மகனுடைய குணங்களும், மகனுக்கு அப்பாவின் குணங்களும் போய் விடுகிறது.

Related Posts
1 of 2

அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களையே காளிதாஸ் – ஆஷ்னா சாவேரி காதல், பிரபு மீது பூஜாகுமார் கொள்ளும் காதல் என்கிற எக்ஸ்ட்ரா எபிசோடுகளுடன் காமெடி பந்தி வைத்திருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே தேசிய விருதை தட்டி வந்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான் ஹீரோ.  ஸ்மார்ட் லுக்கில் துறுதுறுப்பான இளைஞனாக  அறிமுகம். கல்லூரியில் நாயகி ஆஷ்னா சாவேரியுடன் வம்பிழுப்பதும், அப்பா பிரபுவின் குணங்கள் தனக்குள் வந்த பிறகு அதே ஆஷ்னா சாவேரியை ”ஏம் பாப்பா இப்படி கோபப்படுற நீ என்னோட மகள் மாதிரி” என்று பணிவாகச் சொல்லுகிற போதும் தியேட்டரில் நடிப்பில் மட்டுமல்ல, சிரிப்புக்கு கியாரண்டி.

நாயகியாக வரும் ஆஷ்னா சாவேரிக்கு பல படங்களில் கல்லூரிக் காட்சிகளில் நாயகனோடு வம்பிழுக்கும் கேரக்டர் தான். இதைத்தாண்டி அவரது நடிப்பைக் காட்ட காட்சிகளும் இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. அப்புறம் யம்மா ஆஷ்னா இன்னும் கொஞ்சம் வெயிட் போடும்மா… பல காட்சிகள்ல பார்க்க சகிக்கல.!

தழும்ப தழும்ப பாசத்தைக் கொட்டிக்கொடுக்கும் அப்பா கேரக்டரில் வருகிறார் பிரபு. முதல் பாதியில் வேஷ்டி சட்டையிலும் இரண்டாம் பாதியில் பனியன் – ஷார்ட்ஸிலும் என இரண்டு விதமான நடிப்பை தனக்கே உரிய ட்ரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மலேசியாவின் மிகப்பெரிய டான் எம்.எஸ்.பாஸ்கர், அவரிடம் வேலை செய்யும் மாலாக்கா பூஜாகுமார் என அத்தனை கேரக்டர்களும் நான்- ஸ்டாப்பாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் கொடுக்கும் கவுண்டர்கள் எல்லாமே செம டைமிங்! சிறிய கேரக்டர் என்றாலும் அதிலும் காமெடி செய்து விட்டுப்போகிறார் கமல்ஹாசன்.

டி.இமானின் இசையில் மீன் குழம்பும் மண்பானையும் ஃபாஸ்ட் ட்ராக்காக கேட்க வைக்கிறது. பின்னணி இசை அதே தேய்ந்து போன கீபோர்டின் கரிசனம் தான். ரூட்டை மாத்துங்க இமான் இல்லேன்னா பேக்கப் தான். மலேசியாவின் மனசை மயக்கும் முக்கியமான இடங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது  லட்சுமணனின் ஒளிப்பதிவின் ட்ராவல் ட்ரீட்!

முழுப்படத்தையும் காமெடியாகத் தர வேண்டுமென்பதில் டைரக்டர் உறுதியாக இருந்திருக்கிறார் டைரக்டர் அமுதேஸ்வர். ‘ஸாரி’ என்று நாம் ஒருவரிடம் கேட்கப்போகிற ஒரே ஒரு வார்த்தையில் பல புதிய உறவுகளையும், விட்டுப்போன பழைய உறவுகளையும் புதுப்பித்துக் கொண்டு அன்போடு இருக்க முடியும் என்பதை அப்பா – மகனுக்கிடையே இருக்கிற செண்டிமெண்ட் கலந்து பக்கா காமெடிப்படமாக தந்திருக்கிறார் .

மீன் குழம்பும் மண் வாசனையும் – ருசிக்கும்!