ஆவி குமார் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

aavi

துவும் குமுற குமுற ‘ஆவி’ அடிக்கிற படம் தானோ..? என்கிற வழக்கமான சலிப்புடன் கிளம்பினால்…  இயக்குநரின் பெர்பெக்ட்டான ட்ரீட்மெண்ட்டில் ‘அட இங்கப்பார்றா…’ வாகிறோம்!

ஆவிகளுடன் நேரடியாகப் பேசுகிற அசாத்திய திறமை உள்ள ஆவி மீடியம் தான் ஹீரோ உதயா.

சிங்கப்பூரில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோன்றி தனது ஆவிகளுடன் பேசும் திறமையை பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக செய்து காட்டுகிறார். அதே நிகழ்ச்சிக்கு வரும் போலீஸ் ஆபீசரான நாசர் ‘இதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்குகிற செயல்’ என்று உதயாவின் திறமையை நம்ப மறுக்கிறார்.

அதோடு கொலை செய்யப்பட்ட ஒரு டாக்டரின் ஆவியிடம் தொடர்பு கொண்டு பேசி அவரை கொலை செய்தது யாரென்று கேட்டுச் சொல்ல முடியுமா? என்று சவால் விடுகிறார். உதயாவும் அந்த ஆவியை வரவழைத்து கொலை செய்தவரின் பெயரை டிவியில் சொல்கிறார்.

அதன்பிறகு தான் உதயாவுக்கு ஆரம்பிக்கிறது பிரச்சனை?  கொலை செய்ததாக போலீஸ் ஜெயிலில் பிடித்துப் போட்டிருப்பதோ வேறு ஆள்? உதயா யார் பெயரை டிவியில் சொன்னாரோ? அந்த ஆள் உதயாவை கொலை செய்ய முயற்சிக்கிறான்.

அதே சமயத்தில் உதயா தங்கியிருக்கும் வீட்டில் ஹீரோயின் கனிகா திவாரியும் ஆவியாக தங்கியிருக்கிறார். ”நீ செத்து ஆவியாகி விட்டாய்” என்று உதயா சொன்னாலும், கனிகாவோ நம்பத் தயாராக இல்லை. தான் எப்படி செத்தேன் என்பது கூடத் தெரியாமல் முழிக்கும் ஹீரோயின் மீது பரிதாபம் கொள்ளும் உதயா அப்படியே அவர் மீது காதலும் கொள்கிறார். காதலிக்காக அவரின் பின்னணியை விசாரிக்கக் கிளம்புகிறார்.

அப்போது தான் டாக்டரின் கொலைக்கும், கனிகாவின் கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகத் தோன்ற அது என்ன? உதயாவை கொலை செய்ய வந்தவனின் முயற்சி பலித்ததா? உதயாவின் ஆவி மீதான காதல் கை கூடியதா? போன்ற கேள்விகளுக்கு எந்த குழப்பமும் இல்லாமல் விடையாக அமைகிறது கிளைமாக்ஸ்.

இளம் ஹீரோவான உதயாவுக்கு இந்தப்படம் உண்மையிலேயே நல்ல படமாக அமைந்திருக்கிறது. ஆவியை யாராவது காதலிப்பார்களா? ஆனால் உதயா காதலிப்பார். ஹீரோயின் வசீகரமான அழகில் தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக பறிகொடுத்து விட்டு பிறகு ஹாஸ்பிட்டலில் அவரது உடலைப் பார்த்தவுடன் எப்படியாவது அவரது ஆன்மாவை உடலில் சேர்த்து விட்டு அவரோடு வாழ வேண்டும் என்கிற அவரது தவிப்பை மிக அழகாக திரையில் காட்டிருக்கிறார்.

டூயட்ஸ், ஸ்டண்ட் என எல்லாவற்றிலும் ஒரு தேர்ந்த ஹீரோவாக உதயாவை இதில் பார்க்க முடிகிறது. இப்போது தான் உதயாவின் நடிப்புத்தீனிக்கு நல்ல கதைகள் அமைய ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இந்தப்படமே சிறந்த உதாரணம். ஆல் த பெஸ்ட் உதயா சார்!

ஹீரோயினாக வரும் கனிகா திவாரியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அப்படியே காதலிக்கக் கிளம்பி விடலாம் என்கிற அளவுக்கு அழகுப் பதுமையாக வருகிறார். மறந்து போன எல்லாமும் மறுபடியும் ஞாபகத்துக்கு வரும் போது ஹாஸ்பிட்டல், கடற்கரையோரம் ஓடி, ஆடி தனது சந்தோஷத்தை வெளிக்காட்டும் விதத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். எப்படியாவது உதயாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளும் நம்மை ரொம்பவே வலிக்கச் செய்கிறது.

இப்படி படத்தைப் பற்றி சிலாகித்துப் பேச சின்ன சின்ன விஷயங்கள் எக்கச்சக்கம் இருந்தாலும் பேசவே கூடாத ஒரு கேரக்டராக வருகிறார் நண்டு ஜெகன். அவரை காமெடிக்கென்று படத்தில் நேர்ந்து விட்ட இயக்குநர் ஆடியன்ஸ் சிரிப்பார்களா..? என்று யோசித்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் அவர் பேசும் எல்லாமே எரிச்சலைத் தவிர வேறு எதையுமே தரவில்லை. நல்லவேளையாக முனிஸ்காந்த்தும், தேவ தர்ஷினியும் இடைவேளைக்குப் பிறகு ஜெகன் தொடாத இடத்தை தங்கள் காமெடியால் நிரப்பி கொஞ்சம் ‘ரிலாக்ஸ்…’ ஆக்குகிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் இளமை என்றால், ஸ்ரீகாந்த் தேவாவின் காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையில் வழிகிறது பாடல்களுக்கேற்ற பீலிங்க்ஸ்! வெல்டன் பிரதர்ஸ்..!

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் தாய் முத்துச் செல்வன். திரைக்கதையில் எந்தக் குழப்பமும் இல்லாமல், ஒரு ஆவி கதையைக் கூட லாஜிக்குடன் சொல்ல வேண்டுமென்கிற எண்ணத்தில் உழைத்திருக்கிறார். அந்த உழைப்பை அப்படியே தனது இயக்கத்தில் வெளிப்படுத்தி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் காண்டீபன்.

நல்ல கதை அமைந்து விட்டால் உதயா இன்னொரு ரவுண்ட் வரலாம். அதற்கான பிள்ளையார் சுழியாக இந்தப்படம் அமைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆக ஆவி குமார் தீயா வேலை செஞ்சிருக்கார்…!