வித்தியாசமான தேர்தல் – ரஜினி ; சைலண்ட் அஜித் ; யோசித்த விஜய் : ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நட்சத்திரங்கள்!
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியிடம் தலையை கொடுக்கப் போகிறோமோ என்கிற பயம் ஒருபுறம் இருந்தாலும் தமிழக வாக்காளர்கள் இன்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்று வருகிறார்கள்.
9 மணி நிலவரப்படி 18 சதவீதம் வாக்கு பதிவாகியிருக்க, 11 மணி வாக்கில் அது 25 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வருண பகவான் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நூறு சதவீதத்தை வாக்குப்பதிவி நெருங்கும் என்றே தோன்றுகிறது.
யார் யார் வாக்கு போட்டார்கள் என்பதை பார்ப்பதை விட தங்கள் அபிமான நடிகர் நடிகைகள் வாக்கு போட வந்தார்களா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலையிலேயே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்குள் சென்று தனது கடமையை நிறைவேற்றினார். ”அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. கண்டிப்பாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்” என்றும், பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்” என்றும் தெரிவித்தார்.
அதே போல நடிகர் அஜித்தும் திருவான்மியூரில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கிற வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினி உட்பட குடும்பம் சகிதம் வாக்களித்து விட்டு அமைதியாகச் சென்று விட்டார்.
முந்தாநாள் வரை எல்லோரையும் வாக்கு போடச்சொன்ன நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருப்பதால் வாக்கு போடமுடியவில்லை. தமிழக மக்கள் என்னை மன்னித்து விட வேண்டும் என்று அறிக்கை விட்டு விட்டார்.
தேனாம்பேட்டையில் ஓட்டு போட்ட நடிகர் கமலிடம் இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க? என்று மீடியாக்கள் கேட்க ”நாம நெனைக்கிறதெல்லாம் இங்க நடக்கிறதில்லையே…? என்று பதிலளித்தார்.
நடிகர்கள் விஷால், ஆர்யா, சிவகார்த்திகேயன், லாரன்ஸ் ஜீவா, நடிகைகள் ஹன்ஷிகா, குஷ்பு, மீனா, காயத்ரி ரகுராம், சினேகா என சக நட்சத்திரங்களும் தங்கள் தொகுதிக்குட்ப வாக்குச்சாவடிகளில் ஓட்டளித்தனர்.
நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை பத்திரமாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது ஆவணங்களை அலுவலர்களிடம் ஒப்படைத்து, தனது வாக்கை பதிவு செய்ய வாக்கு எந்திரத்திற்கு முன் வந்தார். சில நிமிடம் யோசித்த அவர் பின்னர், தனது வாக்கை பதிவு செய்தார்.
அங்கிருந்து புறப்படும் போதும் பத்திரிகையாளர்கள் அவரிடம் கருத்து கேட்க முற்பட்ட போது எதுவும் சொல்லாமல் சிறிய புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டதால் அவரோடு வந்த பாதுகாவலர்களும், போலீசாரும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.