சன் பிக்சர்ஸ்-அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!
நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ‘ ஜவான்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.
சர்வதேச திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் #AA22xA6 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, இந்திய திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்வை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.