பேரணிக்கு அனுமதி இல்லை! – திசை திரும்புகிறதா திரையுலகினரின் போராட்டம்?

Get real time updates directly on you device, subscribe now.

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும், தியேட்டர்களின் எதேச்சதிகாரத்தை எதிர்த்தும் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்த்திரையுலகினரின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தால் புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்த ஒரு நல்ல முடிவும் எட்டப்படாததால் தொடரும் வேலை நிறுத்தத்தால் திரைப்படத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஏப்ரல் 4-ம் தேதி கோட்டையை நோக்கி திரையுலகினரின் பேரணி நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால்.

அவரின் இந்த பேரணி அறிவிப்பு டிஜிட்டல் நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்களுக்கு எதிரான திரையுலகினரின் போராட்டம் திசை திரும்புகிறதோ? என்கிற அச்சம் சக திரைப்பட கலைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை ஏன் பேரணி என்ற பெயரில் திசை திருப்ப வேண்டும் என்பது தான் அவர்களுடைய கேள்வியாகவும் இருக்கிறது.

Related Posts
1 of 104

ஆனால் ”போராட்டம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று அடித்துச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்.

டிஜிட்டல் நிறுவனங்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சங்கம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்து விட்டது. எதிலுமே தயாரிப்பாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை. இதனால் தான் இனிமேல் இவர்களுடன் பேசி எந்த பிரயோசனமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்த தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வை எதிர்பார்க்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

அதே சமயத்தில் தமிழகத்தில் காவேரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், மீத்தேன் என பல பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுத்துள்ள இந்த சூழலில் திரையுலகினர் பேரணி சென்றால் ஒட்டுமொத்த ஊடகங்களின் பார்வை அங்கே திரும்பி விடும். இதனால் மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும். எனவே இந்தப் பேரணி என்பது மக்களுக்கு எதிராகவே பார்க்கப்படும் என்று கவலைப்படுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

நிஜம் இப்படியிருக்க, தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்றே தெரிகிறது. ஏற்கனவே மெரீனா கடற்கரையில் காவேரி போராட்டத்துக்காக இளைஞர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டு கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திரையுலகினருக்கு அனுமதி கொடுத்தால் அதனால் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்குமோ? என்று அஞ்சும் அரசு பேரணிக்கு அனுமதி கொடுக்காது என்பதே லேட்டஸ்ட் தகவல். இதனால் தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்ட பேரணி நடைபெறாது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் காவேரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அது உண்ணா விரதமா அல்லது எந்த வடிவிலான போராட்டம் என்பது சில தினங்களில் முடிவு செய்யப்பட்டு அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.