கார்த்தி வெளியிட்ட ஆல்பத்தில் காதலைத் தூண்டும் ‘வரியா’!
மியூசிக்ஃபேக்டரி நிறுவனத்தார் ஆஷிஷ் கோத்தாரி என்பவர் சோனி மியுசிக் நிறுவனத்துடன் இணைந்து, இந்த ‘கிளாஸ்மேட்’ என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தில் ‘வரியா’ என்ற பாடலின் டீசரை நேற்று 22.06.2015 திங்கட்கிழமை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
தனிநபர் ஆல்பத்திற்கான வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை, என்ற கேள்வி என்னுள் எழுந்த போதுதான் இந்த ‘கிளாஸ்மேட்’ ஆல்பத்தை உருவாக்கியதாக இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 25ம் தேதி முதல் யு-ட்யூப்பில் வெளியாகும் இந்தப் பாடலில் பிரதாயினி என்ற மாடல் நடித்துள்ளார், ‘விடியுமுன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த ‘கிளாஸ்மேட்’ ஆல்பத்தை பார்த்த எஸ்.ஜே சூர்யாவும், இயக்குநர் பிரபு சாலமனும் இந்த ஆல்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த ‘வரியா’ பாடல் ஒரு மெலடி வகையான காதலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
‘வரியா’ பாடலை புரட்சி நம்பி எழுத, இசான் வர்கீஸ் பாடியுள்ளார். ஜெஃப்ரே ஜோனாத்தன் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ ஆல்பமாகவும் இயக்கியுள்ளார். சோனி நிறுவனம் வெளியிடும் முதல் சிங்கிள் டிராக் தமிழ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.