ஃபேஸ்புக், ட்விட்டரில் போலி அக்கவுண்ட்டுகள்! : நடிகர் ராகவா லாரன்ஸ் ’வார்னிங்’
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயரில் போலியான அக்கவுண்ட்டுகள் வருவது அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அந்தப்படம் எப்போ ரிலீஸ்? இதுல யார் ஹீரோயின்? மாதிரியான சந்தேகங்களைக் கேட்டு அதில் அந்த பிரபலமே பதிலளிப்பது போல எதையாவது சொல்லி வைக்க ஒரே அதகளம் தான்.
இதற்கு முன்பும் சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் பெயரில் போலி அக்கவுண்ட்டுகள் செயல்பட்டு வந்ததும், பின்னர் அவைகளை முடக்கியதும் தெரிந்தது தான். இப்போது இந்த ரோதனையில் சிக்கியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவருடைய பெயரில் யாரோ ஒரு சைபர் கனவான் போலியாக ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை ஆரம்பித்து செயல்படுத்தி வந்திருக்கிறார். அதில் லாரன்ஸின் அடுத்த படத்தில் நஸ்ரியா ஹீரோயினாக நடிக்கிறார் என்று ஒரு ட்விட்டைப் போட அதுவே லாரன்ஸுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விட்டது.
இதனால் உடனடியாக தனது சார்பில் ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருக்கும் லாரன்ஸ் எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் என்னுடைய அடுத்த படத்தில் நஸ்ரியா தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது.
அதில் துளியும் உண்மையில்லை. அதேபோல அந்த ட்விட்டர் அக்கவுண்ட்டும் என்னுடைய அக்கவுண்ட் இல்லை. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப்பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
நான் ஃபேஸ்புக், ட்விட்டர் எதையுமே உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ஒரு மனுஷனை நிம்மதியா சக்சஸை கொண்டாட விட மாட்டானுங்களே…?