ரஜினிகாந்த் கோரிக்கை : நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2015- 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களால் பரபரப்பாக முடிவு எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.
தேர்தலில் வாக்களிக்க காலையிலேயே வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.
அதில் முக்கியமானது தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :
நாமெல்லாம் ஒரே சாதி, நமக்குள்ளே எப்பவுமே ஒற்றுமை இருக்கணும். சமீபத்தில் சில மாதங்களாக வாக்குவாதங்கள் நடந்து விட்டன. அதுக்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லை என்று சொல்லி மக்களோ, ஊடகங்களோ யாருமே தவறாக நினைக்கக் கூடாது.
ஒரு போட்டி வந்துடுச்சி, யாரு ஜெயிச்சாலும் அவங்களுக்கு என் வாழ்த்துகள்.
அப்புறம், இரண்டு வேண்டுகோள். முதல் வேண்டுகோள், யார் ஜெயிச்சி வந்தாலும் முதலில் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்று மாற்ற வேண்டும்.
அதேபோல உயிரே போனாலும் சரி, ஜெயிச்சி வந்தவங்க, கொடுத்த அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றணும். அப்படி நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால், உடனே ராஜினாமா செய்து விட வேடும்.
அது உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கு நல்ல பெயரையும் கொடுக்கும், வருங்காலத்தில் எடுத்துக்காட்டாவும் இருப்பீங்க… என்றார் ரஜினிகாந்த்.