ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் சைலன்ட்டான அஜித்! : ரசிகர்கள் ‘அப்செட்’
ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஆரம்பித்து ஜி.வி.பிரகாஷ், அசோக் செல்வன், ஆரி என வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரை ஜல்லிக்கட்டுக்காக ஆதரவுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நயன் தாரா, காஜல் அகர்வால் என மற்ற மாநில நடிகைகள் கூட இனம், மொழி, மாநிலம் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டில் சம்பாதித்து சாப்பிடுகிற உணர்வோடு ஆதரவு அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்களும் தமிழர்களின் எழுச்சியைக் கண்டு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அவ்வளவு ஏன்? பொதுமக்களின் பிரச்சனைகளுக்கெல்லாம் நாங்கள் குரல் கொடுக்க மாட்டோம் என்று சொன்ன நடிகர் சங்கம் கூட ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மெளன அறவழி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டது.
இப்படி நான்கு மூலைகளில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் வந்து கொண்டே இருந்தாலும் ஒரே ஒருவரின் குரல் மட்டும் இந்த விவகாரத்தில் இன்னும் ஒலிக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்பு இந்த நிமிடம் வரை குறைந்தபாடில்லை.
அவர் வேறு யாருமல்ல ‘தல’ அஜித் தான்.
இந்தப் போராட்டத்துக்கு சென்னை மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து அங்குள்ள ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவிடம் தனது தார்மீக ஆதரவை அஜித் தருவார் என்று நேற்று ட்விட்டரில் பரவலாக செய்தி பரவியது.
இது உண்மையா? அல்லது வழக்கம் போல அஜித் ரசிகர்கள் அவிழ்த்து விட்ட பொய்யா? என்றால் அது வழக்கமான பொய்ச்செய்தியாகவே ஆகி விட்டது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு அஜித் ரசிகர் கூட ”இங்க இவ்ளோ பெரிய போராட்டம் நடந்துக்கிட்டிருக்கு, நீங்க மிக்ஸர் தின்னுக்கிட்டு இருக்கீங்களே தல?” என்று அஜித்திடம் நக்கலோடு கேள்வியெழுப்பியிருக்கிறார். கூடவே ”இதுக்குக் கூடவா ஆதரவு தர மாட்டீங்க?” என்கிற மாதிரியான எரிச்சலான கேள்விகளும் எழாமல் இல்லை.
ஆனாலும் ம்ஹூம்… இதுவரை அஜித்தின் வாயைப் போலவே அவரது காதுகளும் சைலண்ட்டாகவே இருக்கிறது.
இதுக்கெல்லாம் அசர்ற ஆளா நம்ம ‘தல’?