‘எந்திரன் 2’ வில்லன் : அக்ஷய்குமார் வந்தார், அர்னால்ட் ஏன் போனார்?
ரஜினி -ஷங்கர் காம்பினேஷன் என்றால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்க வேண்டுமா என்ன? அதிலும் ‘எந்திரன்’ படத்தின் அடுத்த வெர்ஷன் என்றால் அவர்களின் மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவிடே இல்லை.
எதிர்பார்த்ததை விட ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாததால் போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள் என வழக்கமான தடபுடல்கள் கூட இல்லாமல் சென்னையில் நேற்று எளிமையாக துவங்கியது ‘எந்திரன் 2.0’ படப்பிடிப்பு.
‘கபாலி’க்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி. அப்படி இருந்தும் ‘எந்திரன் 2.0’ வுக்கு தயாராகி விட்டார் ரஜினி.
முதல் பாகத்தின் பிரம்மிப்பிலிருந்தே விடுபடாத ரசிகர்களுக்கு இதில் கூடுதல் பிரம்மிப்பை இயக்குநர் ஷங்கர் காட்டுவார் என்பது மட்டும் நிச்சயம்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஹீரோயின் தேடுதலை விட ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகரைத் தேடிப் புடிக்கத்தான் ஷங்கர் அதிகம் மெனக்கிட்டார்.
முதலில் விக்ரம், கமல் என நம்மூர் நாயகர்களிடம் கேட்டுப் பார்த்தார். எல்லோருமே ரஜினிக்கு வில்லனா? என்று மன்னிக்க முடியாத குற்றத்தை செய்யப்போகிறோம் ரேஞ்சில் பின் வாங்கினார்கள்.
பின்னர் ஹாலிவுட் ஹீரோ அர்னால்ட்டிடமும் பேச்சு வார்த்தை நடந்தது. அவரோ நடிக்க சம்மதம் சொன்னாலும் கேட்ட சம்பளம் தான் ஷங்கரை ரொம்பவே யோசிக்க வைத்தது.
சுமார் 120 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டாராம் அர்னால்ட். அதுபோக அவர் வந்து போக பிளைட் டிக்கெட்ஸ், தங்கும் இடம், கூடவே வரும் ஒரு பெருங்கூட்டம், அவர்களுக்கும், தங்கும் இடங்கள், பெருந்தீணி என கணக்குப் போட்டுப் பார்த்ததில் படத்தின் பட்ஜெட்டில் பாதி அவருக்கே போய் விடும் போலிருந்தது. இந்த பட்ஜெட்டை தாங்கக்கூடிய நிறுவனம் தான் லைகா என்றாலும் ஒரு வில்லன் கேரக்டருக்காக அவ்வளவு கோடிகளை கொட்டிக்கொடுக்க வேண்டுமா? என்று டைரக்டர் ஷங்கர் மாத்தி யோசித்ததின் வரவு தான் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார்.
ரஜினிக்கு வில்லன் அக்ஷய்குமார் தான் என்பதை நேற்று அவரும், ஷங்கரும், ரஜினியும் சேர்ந்தாற்போல வந்த புகைப்படமே உறுதிப்படுத்தி விட்டது.
அப்போ வெற்றியும் உறுதிதான்!