RATING : 4/5
நம் வாழ்க்கையில் வந்து போகிற நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தான் நமக்கு எத்தனை எத்தனை படிப்பினைகளை தந்து விட்டுப் போகிறது. ஆனால் அதையெல்லாம் பாதிக்கப்படுகிற அந்த நேரத்தில் யோசிக்கிறோமே தவிர மற்ற நேரங்களில் ஈஸியாக கடந்து விடுகிறோம்.
அப்படி அரசாங்க வேலைகளுக்காக புரோக்கர்களை நம்பி ஏமாறுகிற மக்களுக்கு படிப்பினையாக மட்டுமில்லாமல் நாம் பார்த்து ரசித்து சிந்தித்து கொண்டாடி மகிழ ஒரு ஜனரஞ்சகமான படமாகவும் வந்திருக்கும் படம் தான் இந்த ”ஆண்டவன் கட்டளை”.
அரசாங்க வேலைகளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் புரோக்கர்களை நாட வேண்டாம் என்கிற வாசகத்தை டைட்டில் கார்டிலேயே போட்டு விட்டுத்தான் கதையை ஆரம்பிக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்துக்குப் பிறகு பல மாஸ் ஹீரோக்களின் ஒளி வட்டம் உங்களை சூழ்ந்து கொள்ளலாம் மணிகண்டன் சார்… அவர்களுக்கான கதைகளில் கூட யதார்த்தத்துக்கு எந்த நிலையிலும் இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் வெற்றிக்கு நல்ல ரசனை உள்ள ரசிகர்கள் எப்போதுமே உங்கள் பக்கம் துணை நிற்பார்கள்.
மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் சேதுபதிக்கு ஊரைச்சுற்றி கடன். அதே ஊரில் வசிக்கும் நமோ நாராயணனைப் போல லண்டனுக்குச் சென்று சம்பாதித்து வந்தால் கடனை அடைத்து விடலாம் என்கிற யோசனையோடு கூடவே சுற்றித் திரியும் நண்பன் யோகி பாபுவை அழைத்துக்கொண்டு சென்னையில் இருக்கும் ஒரு டிராவல்ஸ் கம்பெனி புரோக்கரை அணுகுகிறார்.
இலங்கை அகதி என்கிற பெயரில் லண்டனுக்குச் சென்றால் ஈஸியாக வேலை கிடைத்து விடுமென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அந்த புரோக்கர் சொல்லுகிற எல்லா தில்லு முல்லுகளுக்கும் ஓ.கே சொல்லுகிற விஜய் சேதுபதி மனைவி இருப்பதாகச் சொன்னால் டூரிஸ்ட் விசா எளிதாகக் கிடைக்கும் என்று புரோக்கர் சொல்லுவதை நம்பி மனைவி என்ற இடத்தில் ”கார்மேகக் குழலி” என்கிற பெயரைக் குறிப்பிடுகிறார்.
அவரது நண்பனான யோகி பாபுவுக்கு அனுமதி கிடைத்து விட, விஜய் சேதுபதிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் ஊருக்குச் செல்ல விரும்பாமல் நாசர் நடத்தும் நாடக்குழுவில் வேலை செய்யும் விஜய் சேதுபதிக்கு நாசர் மூலமாக லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்காக தனது பாஸ்போர்ட்டிலிருந்து ”கார்மேகக் குழலி” என்கிற கட்டாத மனைவியின் பெயரை நீக்க வேண்டிய கட்டாயம். அதற்காக அவர் படும் அவஸ்தைகளே கிளைமாக்ஸ்.
தமிழ்சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான கலைஞன் விஜய் சேதுபதி. கமர்ஷியலே கண்ணாயிரமாக இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் செலெக்ட் பண்ணி நடிக்கிற படங்கள் எல்லாமே யதார்த்த நிலையின் உச்சம்! ”காந்தி” என்கிற பெயரை வைத்துக் கொண்டு நேர்மைக்கும், தவறுக்குமான மெல்லிய இடைவெளியில் அவர் கேரக்டர் பயணிக்க ஏற்படும் சிரமத்தை நடிப்பில் அசால்ட்டாக கடந்து போகிறார் விஜய் சேதுபதி.
”பொது இடத்தில அடுத்தவன் பேசுவதை ஒட்டு கேட்பதே தப்பு.. இதுல அறிவுரை வேறயா..?” என்கிற வசனத்தில் ஆரம்பிக்கிற தீப்பொறி ”வீடு வாடகைக்கு விடணும்னா வாட்டர் கனெக்ஷன், கரண்ட் கனெக்ஷன்ன்னு எல்லாம் வெச்சுத்தான் கொடுக்கணும்” என்று சென்னையின் வீட்டு ஓனர்கள் செய்கிற அழிச்சாட்டியங்களுக்கு சவுக்கடி கொடுப்பது வரை எல்லாமே கைதட்டல்களை அள்ளுகிற காட்சிகள்.
‘இறுதிச் சுற்று’ பொண்ணா இது? என்று வியந்து பார்க்க வைக்காமல் நம்ம செல்ல விடுவதில்லை நாயகி ரித்திகா சிங்.
தனியார் செய்திச் சேனலில் வேலை செய்கிற தெம்பில் அரசியல்வாதியிடம் துணிச்சலோடு கேள்விகளை முன் வைக்கிற தைரியம் ஒருபுறம், தன்னால் ஒருவருக்கு உதவி செய்ய முடியும் என்கிற போது அந்த கோப முகத்தில் எட்டிப்பார்க்கிற இரக்கம் மறுபுறம் என மனுஷி கேரக்டரை பிய்த்து மேய்ந்திருக்கிறார்.
படத்தில் சிரிக்க சிரிக்க ரசிக்க வைக்கிற இன்னொரு கேரக்டர் விஜய் சேதுபதி கூடவே வருகிற யோகி பாபு. ஏம்மா பெரிய மூக்கு என்று நாசரை நக்கல் செய்வதிலிருந்து லண்டன் செல்வதற்காக தயாராகும் போது கொடுக்கிற அலப்பறைகள் என கேப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் டைமிங் டயலாக்கைகுகளில் தியேட்டரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.
சிரிக்க வைக்கிற அதே நேரம் இலங்கை போலீசில் சிக்கிக் கொள்கிற தமிழர்களின் நிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை ”ரொம்பக் கெட்டவனுங்கடா அவனுங்க…” என்று விரக்தியில் பேசுகிற ஒரு வசனத்தில் கொண்டு வந்து விடுகிறார்.
வீட்டுப் புரோக்கராக வரும் சிங்கம் புலி அடக்கி வாசித்தால் அதை விட தேவைப்பட்ட இடங்களில் கணீர் குரலிலும், தேவையில்லாத இடங்களில் மெல்லிய குரலிலும் பேசி கேரக்டரை நேசிக்க வைத்திருக்கிறார் குடியேறுதல் விசாரணை அதிகாரியாக வரும் ஹரீஷ் பெராடி.
நாடகக் குழுவில் வரும் பூஜா தேவாரியா பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவரைத் தாண்டி படத்தில் வருகிற ரித்திகா சிங்கின் அம்மா, விஜய் சேதுபதியின் மாமாவாக வரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், டிராவல் ஏஜெண்ட்டாக வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ஜூனியர் வக்கீலாக வரும் வினோதினி தனது மனைவியையும், குழந்தையையும் தமிழ்நாட்டில் தேடி அலையும் ஈழத்தமிழராக வரும் சிவஞானம் அரவிந்தன் என அத்தனை கேரக்டர்களும் ஏதோ ஒரு உண்மையை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகின்றன.
ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு உற்ற நண்பர்களாக படத்தின் ஆரம்பக் காட்சியில் வருகிறார்கள் விஜய் சேதுபதியும் – யோகி பாபுவும். அந்த ஆரம்பக் காட்சியே நம்மை படத்தோடு ஒன்று பயணிக்க தயார் படுத்தி விடுகிறது. அப்படிப்பட்ட பல சூழல்களை பிசிறு தட்டாமல் பிரமிக்க வைக்கிறது சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு.
படத்தில் வேஸ்ட்டான காட்சிகள் என்று எதையுமே சொல்ல முடியாத அளவுக்கு நறுக் நறுக்கென்று கத்தரி போட்டிருக்கிறார் எடிட்டர் அணுசரன்.
மெல்லிய இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கும் கே வின் பின்னணி இசை பாடல்களில் மட்டும் சந்தோஷ் நாராயணனை ஞாபகப்படுத்தி விட்டுப் போகிறது.
குறுக்கு வழியில் நமக்கான அரசாங்க வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைக்கிற அத்தனை பொதுஜனங்களுக்கும் மண்டையில் ஏறுகிற மாதிரி ஒரு விழிப்புணர்வு படத்தை வித் கமர்ஷியலோடு இயக்கித் தந்திருக்கிறார் மணிகண்டன்.
ஆண்டவன் கட்டளை – ஆண்டவன் கை விடல…