ஹர்காரா என்றால் தபால்காரர் என்று அர்த்தம்
“காதலித்துப் பார் தபால்காரன் தெய்வமாவான்” என்ற வைரமுத்துவின் வரிகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலம். ஏன் என்றால் ஒரு காலத்தில் காதலுக்கு கடிதம் ஒரு மிகப்பெரிய ஊடகமாக இருந்தது. இன்று உலகில் தகவல் தொடர்பு என்பது சில நொடிகளுக்குள் மனித உறவுகளோடு கனெக்ட் செய்யக்கூடிய ஒன்றாக மாறிவிட்டாலும் அன்று கடிதத்திற்கு இருந்த மதிப்பே தனி! முக்கியமாக தபால்காரர்கள் மனித வாழ்வின் காவல் தெய்வங்கள் போல இருந்தார்கள். அப்படியான தபால்காரரை முன்வைத்த கதையே ஹர்காரா படத்தின் கதை!
காளிவெங்கட் தபால்காரர் வேலையில் சலிப்பை காட்டுகிறார். ஒரு கட்டத்தில் தேனி மாவட்டம் ஒரு மலைக்கிராமத்திற்கு போஸ்ட்மேன்& ஆபிஸே தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார். ஆனால் அவரின் முடிவை முன் வைத்து அந்த ஊரில் உள்ள ஒரு ஆள், 150 வருடங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட்மேன் செய்த ஒரு விசயத்தைச் சொல்கிறார். அந்த விசயம் தான் படத்தின் கதை!
தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை எல்லாப் படங்களிலும் நிரூபித்து வரும் காளிவெங்கட் இப்படத்திலும் கூடுதலாக நிரூபித்துள்ளார். மிகச்சிறந்த நடிப்பு அவரின் நடிப்பு. படத்தின் இயக்குநரான ராம் அருணும் சிறப்பாக நடித்துள்ளார். கூடுமானவரை படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர் கதையின் நிதானத்தை உணர்ந்து இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவில் மலைக்கிராமம் நம் கண்முன்னால் வாழ்கிறது
நல்ல கதையாக இருந்தாலும் மிகவும் மெதுவாக நகர்கிறது படம். போதிய அழுத்தமும் அர்த்தமும் நிறைந்த திரைக்கதையாக இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருந்தால் ஹர்காராவிற்கு ஆயிரம் தம்ஸப் காட்டியிருக்கலாம். இருந்தாலும் புதிய முயற்சிக்காகப் பாராட்டலாம்
2.75/5