RATING : 3.8/5
வழக்கமான ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான போலி ‘சர்ட்டிபிகேட்’ சமாச்சாரத்தை மீடியா என்கிற ஊடகத்தின் பின்னணியில் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் டி.என்.சந்தோஷ். அதற்கு அதர்வா போட்டிருக்கும் உழைப்பும் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
உலக அளவில் புகழ்பெற்ற ‘பிபிசி’ சேனலில் வேலை செய்வது தான் ஹீரோ அதர்வாவின் கனவு. அதற்கான தேடல் ஒருபக்கம் இருந்தாலும், தற்சமயத்துக்கு ஸ்கை டிவி என்கிற லோக்கல் சேனலில் நிருபராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
சேனலில் வேலை, நண்பர்களுடன் அரட்டை என பொழுதை போக்குபவரின் வாழ்க்கையில் கிராஸ் ஆகிறார் ஹீரோயின் கேத்ரீன் தெரசா. இருவருக்குமான காதல் முற்றிய நிலையில் திடீரென்று பிபிசி சேனலில் இருந்து வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வர, அதை அட்டன் செய்து விட்டு அழைப்புக்காக காத்திருக்கிறார்.
அழைப்புக்குப் பதில் நாலைந்து போலீசார் வீட்டுக்குள் வந்து அதர்வாவை அள்ளி போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள்.
போலியான கல்விச் சான்றிதழ்களை கொடுத்து வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய குற்றத்துக்காக அவர் உள்ளிட்ட ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லாத நான்கைந்து இளைஞர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கிறது. பெயிலில் வெளியில் வரும் அதர்வா தனது கல்விச் சான்றிதழ் போலியாதன் பின்னணியை தேடிப்போகிற போது அதன் பின்னணியின் இருக்கிற வில்லன் கோஷ்டிகளை துவைத்து எடுப்பது தான் கிளைமாக்ஸ்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தாலும் நல்ல கதைகள் அமைய வேண்டுமல்லவா? அப்படிப்பட்ட கதையோடு ‘ஈட்டி’ யில் குதிரைப் பாய்ச்சலை ஆரம்பித்திருக்கும் அதர்வா ‘கணிதனி’ல் தனது வெற்றிக்கான சூத்திரத்தை மிகச்சரியாக போட்டு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு டேக் ஆப் ஆகியிருக்கிறார்!
என்னதான் மீடியா பெரிதாக வெளியில் பேசப்பட்டாலும் அதில் வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை தரம் என்பது இன்றைக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலை தான் என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் அதர்வா- நரேன் காம்பினேஷன் காட்சிகளில். தாத்தா சுதேசமித்திரனில் வேலை செய்தவர், அப்பா நரேன் வருடக்கணக்கில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிக்கிறார் என்கிற மீடியா பின்புலம் இருந்தும் ”நான் படுற கஷ்டம் உனக்கு வேணாம்டா…” ”உங்கூட இஞ்சினியர் படிச்ச பசங்க எல்லாம் இப்போ ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குறாங்க”. ”நீ பிபிசி பிபிசின்னு மாசம் ஆறாயிரம் தான் சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்க” என்று சொல்கிற காட்சியில் மீடியாக்காரர்களில் நிஜமான வாழ்க்கை முறை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
‘மெட்ராஸ்’ல சுடிதார்ல ஃசைலண்ட்டா வந்த பொண்ணா இது என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் நாயகி கேத்ரீன் தெரசா. அவர் போடுகிற கண்ணைக் கூசுகிற கலர் காஸ்ட்யூம்களுக்கு கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவின் ஆங்கிள்களும் கூடுதல் கவர்ச்சியை திரையில் காட்டி ரசிகர்களின் மனசை கிறங்கடிக்கிறது.
காதைக்கிழித்து ரத்தம் கொட்டுகிற அளவுக்கு காட்டுக்கத்தல் எல்லாம் இல்லை வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தருண் அரோராவிடம். அமைதியாகவே வருகிறார். மெதுவாகவே நடக்கிறார்.
ஆனாலும் மனுஷன் பார்வையாலேயே மிரட்டி அடிக்கிறார். தமிழுக்கு இன்னொரு நல்ல வில்லன்!
பாடல்களை விடுங்கள், பின்னணி இசையில் அப்படி ஒரு வேகம் சிவமணியின் டிரம்ஸ் அடிகளில். சில காட்சிகளில் இரக்க குணம் கொண்ட போலீசாகவே வந்து விட்டு போய் விடுகிறார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
வில்லனின் பலப்பின்னணி தெரிந்தும் கருணாகரன் அவன் பக்கம் தானாக போய் சிக்குவதும், சேனலில் ஆபீஸ் பாயாக இருக்கும் ஒருவனை ஹார்ட் டிஸ்க்கில் உள்ள போலி சான்றிதழ் ரகசியங்களை எடுத்து வர அனுப்புவதும் திரைக்கதையின் பூ சுத்தல்.
போலி சான்றிதழ்களின் நடமாட்டம், அதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அரசியல், அதிகார வர்க்கத்தினரின் கூட்டு அதனால் படித்தவர்கள் பாதிக்கப்படுவதும், பணமிருப்பவர்களை சொகுசான வேலைகளில் உட்கார்ந்து கொள்வதும் என போலி சான்றிதழ் புழக்க ஏரியாவின் எல்லா விஷயங்களையும் மிச்சம் வைக்காமல் அலசி ஆராய்ந்து புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.
வழக்கமான ஆக்ஷன் படமாக மட்டுமில்லாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் தங்களது சான்றிதழ் விஷயத்தில் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதை பரபரப்பான திரைக்கதையின் வேகத்தில் துணிச்சலாக தந்திருக்கிறார் இயக்குநர் டி.என்.சந்தோஷ்.
கணிதன் – வெற்றிச் சூத்திரம்