RATING 4/5
சென்னை போன்ற மாநகரங்களில் நாம் காணும் வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக வேலை நிமித்தமாக மாநகரங்களை நோக்கி படையெடுக்கும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களுக்கு நகர வாழ்க்கை தரும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் தங்களை பழக்கிக் கொள்ளவே சில வாரங்கள், சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம்.
சென்னை வந்தது பற்றி கேட்கிற ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். நிறைய சுவாரஷ்யங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
அப்படி வெவ்வேறு குணம் கொண்ட சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சென்னையில் சந்திக்கிற அனுபவங்களை கிளைமாக்ஸில் ஒரே புள்ளியில் இணைத்திருக்கும் படம் இந்த ‘மாநகரம்’.
தன் காதலியை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐடி கம்பெனியில் வேலை தேடி வரும் ஸ்ரீ. அதே ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் ரெஜினா பின்னாலேயே சுற்றும் சந்தீப் கிருஷ்ணன். மகனின் மருத்துவச் செலவுக்காக சென்னையில் கார் டிரைவர் வேலைக்கு வரும் சார்லி.
மிகப்பெரிய தாதாவாக வரும் மதூசூதன் ராவ். அவனையே மிரட்டி பணம் பறிக்க நினைக்கும் இன்னொரு குட்டி தாதா அருண் அலெக்சாண்டர். எப்படியாவது தாதாவாகி விட வேண்டுமென்று அந்த குட்டி தாதாவிடம் அடியாளாகச் சேரும் காமெடி முனீஸ்காந்த், லஞ்சல், பணம் பறிப்பு என நேர்மற்றவராக வரும் போலீஸ் அதிகாரி என இவர்களின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுகிற போது என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ்.
ஸ்ரீ மற்றும் சுந்தீப் இருவரும் தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் படத்தில் அவர்கள் மட்டுமல்ல, அந்தச் சுட்டிச் சிறுவன் கூட நடிப்பில் நம்மை கவனிக்க வைக்கிறார். ஒருவர் கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்தவர், இன்னொருவர் சென்னையிலேயே வாழ்ந்தவர் இருவருக்குமான கேரக்டர் வித்தியாசத்தை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிலும் சென்னை வந்த ஸ்ரீ சார்லியிடம் ஒரு கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் கேட்பதெல்லாம் சென்னையை நோக்கி வந்த அத்தனை பேரும் கேட்கிற சந்தேகமாக இருந்திருக்கும்.
கண் முன்னால் நடக்கிற சம்பவங்களைப் பார்த்து வெறுப்படையும் அதிலும் ஒவ்வொரு சம்பவத்திலும் சம்பந்தமே இல்லாமல் தானே மாட்டிக்கொண்டு வெறுப்படையும் ஸ்ரீ இதெல்லாம் ஊராண்ணே..? என்று சார்லியிடம் சொல்லுவார். அதே ஸ்ரீ தான் இங்க தான் நாம வாழப்போறோம் என்று கிளைமாக்ஸில் தன் காதலியிடம் புன்னகையோடு சொல்கிற போது தியேட்டர் கைதட்டல்களால் குழுங்குகிறது.
இப்படி படத்தில் கைதட்டி ரசிக்க நாம் கடந்து வந்த அத்தனை விஷயங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பொதுவாக சீரியஸான ஒரு கதையில் காமெடி சேர்ப்பது என்பது இடைச்செறுகலாகத்தான் இருக்கும். ஆனால் இதில் முண்டாசுப்பட்டி ராமதாஸ் செய்கிற காமெடி கூட காட்சியோடு இணைந்து வருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவனை மாற்றி கடத்தி வந்து விட்டு அவனை வைத்து இவர் செய்கிற கூத்தெல்லாம் உச்சக்கட்ட காமெடி.
எந்த பணத்துக்காக அவ்வளவு தூரத்துக்கு கஷ்டப்பட்டாரோ அதே பணத்தை தாதா தூக்கிப் போடும் போது அதை எடுக்காமாலேயே நகருகிற அந்தக் காட்சியில் ரசிகர்கள் மனதில் நெகிழ்வான இடத்தையும் பிடித்துக் கொள்கிறார் ராமதாஸ்.
பார்க்கும் போதே பரிதாபத்தை அள்ளிக்கொள்கிற கேரக்டர் என்றால் சார்லிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. இந்தப்படத்திலும் அப்படி ஒரு கேரக்டரில் தான் வந்து நம்மை நெகிழ வைக்கிறார் மனுஷன்.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் வசனங்கள்!
“என்னைப் போட்டு ரோட்ல நாலு பேர் அடிக்கறாங்க, அதை தடுக்க ஒருத்தன் கூட வரல. இதெல்லாம் ஒரு ஊரா சார்?”
“நாம கேட்ருக்கோமா சார்? நாம கேட்டா தான் நமக்காகவும் கேக்க வருவாங்க.”
“சென்னைக்கு வந்து நல்லா சம்பாதிச்சிட்டு, வாய் கூசாம இந்த ஊரை திட்டுவாங்க. ஆனா, அப்படித் திட்டுற எவனும் இங்க இருந்து கிளம்பமாட்டாங்க.”
“ஒரு சிலர் பண்ற தப்பால ஊரையே திட்றதில் என்ன சார் அர்த்தம் இருக்கு?”
இப்படி படத்தில் உரையாடல்களில் இருக்கிற உண்மைகள் சென்னை வாசிகள் அத்தனை பேர் மண்டையிலும் ஆணி அடித்தாற் போல தெறிக்கிறது.
முதலில் இது போன்ற படங்களின் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு அதை கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் தயாரிக்க முன் வருவதற்கே ஒரு பெரும் துணிச்சல் வேண்டும். அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு முதலில் மனம் திறந்த பாராட்டுகள்!
அடுத்து பாராட்டுதலுக்குரியவர் அறிமுக இயக்குநர் லோகேஸ் கனகராஜ். ஒரு சம்பவத்தை கதையாக்கி அதற்கு திரைக்கதை எழுதி அதை ரசிகர்களுக்கு படமாக்கித் தருவதே சில அனுபவ இயக்குநர்களுக்கு பெரிய வேலையாக இருக்கும். ஆனால் இதில் அரை டஜன் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடுத்தடுத்து அழகாகக் காட்சிப்படுத்தி ஒன்றுக்கொன்று நூல் பிடித்தாற்போல் தொடர்பை உண்டு பண்ணி கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் தடுமாற்றம் இல்லாமல் தந்திருக்கிறார்.
அதற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, எடிட்டர் பிலோமின் ராஜ் என படத்தில் வேலை செய்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.
நகரும் காட்சிகளில் நொடிக்கு நொடி சுவாரஸ்யம்! சென்னை மாதிரியான மாநகரங்களில் நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையை கிளறி விடும் பெருமைக்குரிய படைப்பு தான் இந்த ‘மாநகரம்’!
மாநகரம் – சலிக்கவே சலிக்காத சுற்றுப்பயணம்!