நட்சத்திரங்கள் – சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த், சாதிகா, சூரி, ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி மற்றும் பலர்
இயக்கம் – சுசீந்திரன்
வகை – ஆக்ஷன் – டிராமா
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
RATING – 2.5/5
இயக்குகிற ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சமூகப் பிரச்சனையை காட்சிப்படுத்தும் சுசீந்திரன் மற்றுமொரு முக்கியமான சமூகப் பிரச்சனையை ஆக்ஷன் வித் கமர்ஷியலாக தந்திருக்கும் படம் தான் இந்த ”நெஞ்சில் துணிவிருந்தால்.”
ஹீரோ சந்தீப் கிஷனும் விக்ராந்த்தும் நெருங்கிய நண்பர்கள்.
இதில் சந்தீப்பின் தங்கை சாதிகாவும், விக்ராந்த்தும் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் காதலிக்கிறார்கள்.
நண்பனின் தங்கையை அவனுக்குத் தெரியாமலேயே காதலிக்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியில் இருக்கும் விக்ராந்த் விஷயத்தை ”உன் அண்ணனிடமாவது தெரிவித்து விடலாம்” என்று சாதிகாவிடம் சொல்கிறார். ”கொஞ்சம் பொருத்திரு நானே சொல்கிறேன்” என்று விக்ராந்த்தை சாதிகா சமாதானம் செய்கிறார்.
மருத்துவக் கல்லூரியில் வேலை செய்யும் சாதிகாவை கொண்டு போய் விடுவது, திரும்பக் கூட்டிக் கொண்டு வருகிற வேலையைச் செய்வது எல்லாமே விக்ராந்த் தான். ஒருநாள் அவருக்குப் பதில் சந்தீப் தன் தங்கையை கூப்பிடச் செல்கிறார்.
தங்கையோடு டூவிலரில் வருகிற வழியில் சந்தீப்பை வழி மறிக்கும் ஒரு கும்பல் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. ஆனால் ஹெல்மெட்டைக் கழற்றியதும் முகத்தைப் பார்க்கும் அந்தக் கும்பல் ”நாங்கள் தேடி வந்த ஆள் நீ இல்லை” என்று சந்தீப்பை ஒன்றும் செய்யாமல் அனுப்புகிறார்கள்.
வீட்டுக்குச் சென்ற பிறகு அம்மாவின் மூலம் தங்கையின் காதல் சந்தீப்புக்கு தெரிய வர, கொலை முயற்சி விக்ராந்த்துக்காக நடந்தது என்கிற உண்மை தெரிய வருகிறது.
எதற்காக தன் நண்பனை அந்தக் கும்பல் கொலை செய்ய முயற்சித்தது? என்று அவர்களை பின் தொடர்கிற போது கொலை முயற்சி விக்ராந்த் மீதும் இல்லை சந்தீப்பின் தங்கை மீது தான் என்கிற அடுத்த அதிர்ச்சி தகவல் வருகிறது.
ஏன் இந்த கொடூர முயற்சி? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதிலிருந்து தன் தங்கையை சந்தீப் எப்படி காப்பாற்றுகிறார்? போன்ற கேள்விகளுக்கு பதிலாக அமைவதே படத்தின் கிளைமாக்ஸ்.
தெலுங்கு ஹீரோவான சந்தீப் கிஷனுக்கு தமிழில் ‘மாநகரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்திருக்கும் படம். படம் முழுக்க இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி உடனான காதல் காட்சிகள் அவ்வளவு இல்லையென்றாலும் விக்ராந்த்துடன் கை கோர்த்துக் கொண்டு போடும் சண்டைக்காட்சிகள் மிரட்டல்.
சந்தீப்பின் நண்பனாக வரும் விக்ராந்த் இதற்கு முந்தைய படங்களில் பார்த்ததைப் போலவே உம்மனா மூஞ்சியாக வருகிறார். நண்பர்களுடன் பேசும் போது, காதலிக்கும் போது, ஆக்ஷன் காட்சிகளில் சண்டை போடும் போது என எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே ரியாக்ஷன் தான்.
நாயகியாக மெஹ்ரீன் பிர்சடாவை தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். சாயலில் எடை குறைத்த ஹன்ஷிகாவை ஞாபகப்படுத்தினாலும் குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவுக்கு அவருக்கு படத்தில் காட்சிகள் இல்லாதது பெருங்குறை.
சுசீந்திரன் படங்கள் என்றாலே முதல் பாதி காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என்று கலகலப்பாகச் செல்லும், அந்த மேஜிக் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் முழுமையாக நிகழவில்லை. காமெடியனான சூரியை காமெடியனாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் மாற்றப்பட்டிருக்கிறார். முதல் பாதியில் சூரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்.
படத்தில் வித்தியாசமான வில்லத்தனத்துடன் கூடிய நடிப்பில் ‘அள்ளு’ கிளப்புகிறார் ஹரீஸ் உத்தமன்.
அருள்தாஸ், துளசி, டி.சிவா, அந்த வில்லன் கோஷ்டியில் வருகிற இளைஞர்கள் என சுசீந்திரனின் எல்லாப் படங்களிலும் வரும் அதே நட்சத்திரங்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். அதனாலோ என்னவோ புதிய படத்தைப் பார்ப்பது போல இல்லாமல் சுசீந்திரனின் பழைய படத்தை மீண்டும் பார்த்த உணர்வு பல காட்சிகளில் ஏற்படுகிறது.
அடுத்தடுத்த படங்களில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு லீவு கொடுங்க சுசீந்திரன்.
பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகம் என்றாலும் பின்னணி இசையில் கவர்கிறார் டி.இமான். ஹார்ட் பீட்டை பல மடங்கு எகிற வைக்கிற சண்டைக்காட்சிகள் கூடுதல் பலம்.
ஒரு கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமே அதெல்லாம் இருக்க வேண்டும் என்பது தான் சுசீந்திரனின் அடையாளம். அந்த அடையாளத்துக்கான மெனக்கிடல்கள் குறைவாக இருந்தாலும் கந்து வட்டிக் கொடுமை, மருத்துவக் கல்வியின் பின்னால் இருக்கும் வணிக நோக்கம் ஆகியவற்றை தொட்ட விதத்தில் சுசீந்திரனைப் பாராட்டலாம்.